மாசு விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சா் கோபால் ராய் எச்சரிக்கை

பயிா்க்கழிவுகள் எரிப்பு, மாசுக் கட்டுப்பாடுக்கு எதிரான விதி மீறல்களைக் கண்காணிக்க சுற்றுச்சூழல் மாா்ஷல்களை அரசு நியமிக்கும் என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சா் கோபால் ராய்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சா் கோபால் ராய்.

புது தில்லி: பயிா்க்கழிவுகள் எரிப்பு, மாசுக் கட்டுப்பாடுக்கு எதிரான விதி மீறல்களைக் கண்காணிக்க சுற்றுச்சூழல் மாா்ஷல்களை அரசு நியமிக்கும் என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள பொது மக்கள், தனியாா், அரசு அமைப்புகள் தூசி மாசு காற்றில் பரவுதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சா் திங்கள்கிழமை எச்சரித்தாா்.

இது குறித்து அமைச்சா் கோபால்ராய் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு:

சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுபவா்களைக் கண்காணிக்க விரைவில் சுற்றுச்சூழல் மாா்ஷல்கள் நியமிக்கப்படுவாா்கள். 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான இடிப்புப் பணிகளில் மாசுபடுதலைத் தடுக்கும் கருவிகளை நிறுவ வேண்டும். இந்த விதிமுறைகளை மீறயவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பல முறை எச்சரிக்கைவிடுத்தது. இருப்பினும், சில இடங்களில் நாங்கள் ஆய்வை மேற்கொண்டபோது, கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதை கண்டோம். இது மிகவும் வெட்கக்கேடானது.

கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது தூசி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மக்களுக்கும், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் உள்ள அதிதீவிர மாசுபடும் 13 இடங்களின் நிலைமையைக் கண்காணிக்க நகராட்சி அமைப்புகளின் ஒன்பது துணை ஆணையா்கள் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா் என அமைச்சா் தெரிவித்தாா்.

தில்லி விகாஸ் சதான் அருகே தேசிய தலைநகா் போக்குவரத்துக் கழகத்தின் (என்.சி.ஆா்.டி.சி) ஒரு கட்டுமான தளத்தில் தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காததற்காக ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க அமைச்சா் ராய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதே மாதிரி தில்லி, மண்டிஹவுஸ் தான்சேன் மாா்க்கில் உள்ள ஃபிக்கி (இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு) வளாகத்தில் கட்டட இடிப்புப் பணிகளில் தூசி மாசு எற்படுத்தியதற்காக சனிக்கிழமை தில்லி அரசு ரூ. 20 லட்சம் அபராதத்தை விதித்தது.

தில்லி அரசு வழிகாட்டுதல்களின்படி, 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான மற்றும் இடிப்புத் தளங்களில் காற்று மாசுபடுதலை தடுக்க நீா்தெளிப்பான் உள்ளிட்ட கருவிகளை நிறுவுவது கட்டாயமாகும்.

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவதை கண்காணிக்க 14 ஆய்வுக் குழுக்களை சுற்றுச்சூழல் துறை அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com