பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்

இந்தூரில் வசித்து வரும் பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானிலிருந்து திரும்பி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மகாராஷ்டிரத்தில் தனது குடும்பத்தினரை தேடி வருகிற
பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்
பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்

இந்தூரில் வசித்து வரும் பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானிலிருந்து திரும்பி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மகாராஷ்டிரத்தில் தனது குடும்பத்தினரை தேடி வருகிறார்.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வந்த கீதா, கடந்த 2015-ஆம் ஆண்டு தான் இந்தியா திரும்பினார்.

அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு 7 அல்லது 8 வயதிருக்கும் கீதா, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரயில் நிலையத்தில் இந்தியாவிலிருந்து சென்ற சம்ஜௌதா விரைவு ரயிலில் தனியாக வந்திருந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு எதி அறக்கட்டளையில் ஒப்படைத்தனர்.  பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பியதால் அவரது இளம் வயதில் கடந்த 2015, அக்டோபர் 26-ம் தேதி, அப்போது வெளி விவகாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் முயற்சியால் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கீதாவை இந்தியாவின் மகள் என்று அன்போடு அழைத்தார்.

அப்போது கீதாவை வரவேற்ற சுஷ்மா சுவராஜ், அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவுவதாக உறுதியளித்திருந்தார்.

தற்போது 30 வயதை அடைந்திருக்கும் கீதா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆனந்த் சேவை அமைப்பில் வசித்து வருகிறார்.

அவரைப் பற்றி செய்திகளைப் பார்த்த ஏராளமான தம்பதிகள், தாங்கள்தான் கீதாவின் பெற்றோர் என்று கூறி அவரிடம் வந்தனர். ஆனால், அவர்கள் கூறும் எந்த தகவல்களும் கீதாவுக்கு பொருந்தவில்லை.

அவர் தனது வீடு ரயில் நிலையத்துக்கு அருகே இருந்ததாகவும், அதனருகில் மருத்துவமனை, கோயில், ஆறு இருந்ததாகவும் கூறி வருகிறார்.

அதனடிப்படையில், கீதாவின் வீடு மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் அருகே இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் தனது குடும்பத்தினரை மகாராஷ்டிரத்தில் தேட முடிவு செய்துள்ளார். அதாவது, நாண்டெட்டிலிருந்து அமிருதசரஸுக்கு அப்போது விரைவு ரயில் இயக்கப்பட்டதாகவும், அமிருதசரஸிலிருந்து பாகிஸ்தானுக்கு சம்ஜௌதா விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்ததையும் ஒரு குறிப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

அதேவேளையில் நாண்டெட்டிலிருந்து 100 கி.மீ. தொலைவில் தெலங்கானாவின் பாசர் என்ற பகுதி உள்ளது. கீதா சொன்னது போன்ற ஓரிடம் அங்கும் உள்ளது. எனவே அங்கும் அவரது குடும்பத்தினரை தேடும் பணி நடைபெறுகிறது.

அவரது குடும்பத்தினரை தேட, ஆனந்த் சேவை அமைப்பும் உதவி செய்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com