8 மணிக்கு எம்எல்ஏ-க்களையும், 9 மணிக்கு அமைச்சர்களையும் சந்திக்கிறார் கெலாட்

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட் இரவு 8 மணிக்கு எம்எல்ஏ-க்களையும், 9 மணிக்கு அமைச்சர்களையும் சந்திக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட் இரவு 8 மணிக்கு எம்எல்ஏ-க்களையும், 9 மணிக்கு அமைச்சர்களையும் சந்திக்கிறார்.

இந்த சந்திப்புகள் ஜெய்ப்பூரிலுள்ள கெலாட்டின் இல்லத்தில் வைத்து நடக்கிறது.

இதனிடையே, துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக தில்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரால் சந்திக்க முடியவில்லை. எனினும், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படலை சச்சின் பைலட் சந்தித்ததாகவும், பைலட்டுக்கு காங்கிரஸ் கட்சி எவ்வித அநீதியையும் இழைக்காது என்று அகமது படேல் உறுதியளித்ததாகவும் தெரிகிறது.

அதேசமயம் ராஜஸ்தானுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கான எவ்வித அச்சுறுத்தலும் அபாயமும் இல்லை என்று சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மற்றும் மற்ற தலைவர்கள் தங்களது முழு ஆதரவையும் கெலாட்டுக்கு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தங்களது ஆதரவுக் கடிதத்தை முதல்வர் கெலாட்டிடம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு எம்எல்ஏ-க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com