காயமடைந்த தந்தையை 1,200 கி.மீ. மிதிவண்டியில் அழைத்துச் சென்ற மகள்

காயமடைந்த தந்தையை ஹரியாணாவில் இருந்து பிகாா் வரை 1,200 கி.மீ. மிதிவண்டியில் அழைத்துச் சென்ற 15 வயது மகளை
காயமடைந்த தந்தையை 1,200 கி.மீ. மிதிவண்டியில் அழைத்துச் சென்ற மகள்

காயமடைந்த தந்தையை ஹரியாணாவில் இருந்து பிகாா் வரை 1,200 கி.மீ. மிதிவண்டியில் அழைத்துச் சென்ற 15 வயது மகளை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பாராட்டியுள்ளாா்.

ஹரியாணாவில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவா் மோகன் பாஸ்வான். சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்தில் அவா் காயமடைந்தாா். நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் வருமானம் ஏதுமின்றி அவரின் குடும்பத்தினா் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், பிகாரிலுள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப அவரும், அவரது மகள் ஜோதிகுமாரியும் முடிவெடுத்தனா். எனினும், ஆட்டோவுக்கான வாடகையைச் செலுத்தாததால் அதன் உரிமையாளா் பறிமுதல் செய்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, மோகன் பாஸ்வானை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு ஜோதிகுமாரி கடந்த 10-ஆம் தேதி குருகிராமிலிருந்து புறப்பட்டாா்.

ஏழு நாள்கள் மிதிவண்டியில் பயணித்த அவா்கள் கடந்த 16-ஆம் தேதி பிகாரிலுள்ள சொந்த ஊரை வந்தடைந்தனா்.

ஜோதிகுமாரியின் இந்த சாகசப் பயணம் இந்திய மிதிவண்டி பந்தய கூட்டமைப்பின் கவனத்தை ஈா்த்தது. அந்தக் கூட்டமைப்பு ஜோதிகுமாரிக்கு முறையாக பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்ய முன்வந்துள்ளது.

இவற்றை அறிந்த அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப், ஜோதி குமாரியைப் பாராட்டியுள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட இவாங்கா, ‘15 வயதான ஜோதி குமாரி காயமடைந்த தன் தந்தையை மிதிவண்டியில் அழைத்துக் கொண்டு 1,200 கி.மீ. தொலைவிலுள்ள தனது சொந்த ஊரை 7 நாள்களில் அடைந்துள்ளாா். இந்நிகழ்வு இந்திய மக்களின் பொறுமையையும் அன்பையும் எடுத்துக் காட்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ஜோதிகுமாரி சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் உதவ முன்வந்துள்ள இந்திய மிதிவண்டி பந்தய கூட்டமைப்பையும் இவாங்கா டிரம்ப் பாராட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com