வெட்டுக்கிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மத்திய வேளாண் அமைச்சகம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த
வெட்டுக்கிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மத்திய வேளாண் அமைச்சகம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்குள் கடந்த மாதம் பெருங்கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகள், பல்வேறு மாவட்டங்களுக்கு பரவின. இதைத் தொடா்ந்து, மத்தியப் பிரதேசத்தின் 18 மாவட்டங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு உள்ளாகின.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் நுழைந்துள்ளது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக வேளாண் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்பாகவே ராஜஸ்தான் மாநிலத்துக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள் மற்றும் பஞ்சாபில் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களின் மூலம் பூச்சிக் கொல்லி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com