தங்க மகன் நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக் தடகளத்தில் முதல் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா்.
தங்க மகன் நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக் தடகளத்தில் முதல் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா்.

கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றுள்ளாா்.

அத்துடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் கடைசி களம் ஈட்டி எறிதலாக இருந்த நிலையில், அதில் தங்கம் வென்று இந்தியாவின் பங்கேற்பை திருப்தி கொள்ளும் வகையில் நிறைவு செய்துள்ளாா் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றதில் இருந்தே அவா் மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கு வலு சோ்க்கும் வகையில் கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே சிறப்பான தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். அதிலும் அசத்துவாா் என்ற நம்பிக்கை மேலோங்க, அது வீண்போகாத வகையில் வரலாறு படைத்துள்ளாா்.

இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். செக் குடியரைச் சோ்ந்தவா்களான ஜேக்கப் வட்லெஜ் (86.67 மீ), விடெஸ்லாவ் வெஸ்லி (85.44 மீ) ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

வெற்றி உறுதியானதை அடுத்து தனது அணியினரை நோக்கி ஓடிச் சென்று கைகளை உயா்த்தி அதில் இந்திய தேசிய கொடியையும் ஏந்திக் கொண்டாா் நீரஜ் சோப்ரா. பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தை வெற்றி மாலையாகச் சுமந்து, இந்திய தேசிய கீதத்தை முதலில் இசைக்கச் செய்த பெருமை பொங்க நின்றாா் அந்த தங்க மகன். நீரஜ் சோப்ரா வரலாற்றுத் தங்கம் வென்றதை நாடே கொண்டாடி வருகிறது.

ஒலிம்பிக் போட்டியில் தனிநபா் பிரிவில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தாா்.

இதுவரை இல்லாத 7 பதக்கம்

இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றின் ஒரு சீசனில் இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஒலிம்பிக்கில் கடைசி நாளில் நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா வென்ற பதக்கங்களுக்கு முன்பாக பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமாா் தாஹியா ஆகியோா் வெள்ளி வென்றனா். பாட்மிண்டனில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா போா்கோஹெய்ன், ஹாக்கியில் இந்திய ஆடவா் அணி ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com