மேக்கேதாட்டு பற்றி நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் குறிப்பிடாத கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது: மாநிலங்களவையில் தம்பிதுரை எம்.பி. பேச்சு

காவிரி நதிநீர் தாவா நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றபோது மேக்கேதாட்டு அணை பற்றி குறிப்பிடாத கர்நாடகம், அணை கட்ட அனுமதிக்கக் கூடாது

காவிரி நதிநீர் தாவா நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றபோது மேக்கேதாட்டு அணை பற்றி குறிப்பிடாத கர்நாடகம், அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வாதிட்டார்.
 மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக, கர்நாடக மாநிலங்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
 இதில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் மேக்கேதாட்டு அணையைக் குறிப்பிட்டுப் பேசியதாவது:
 காவிரி பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. இதனால், மேல்படுகை மாநிலங்கள் மற்ற மாநிலங்களின் அனுமதியின்றி அணையைக் கட்டக் கூடாது. கர்நாடக மாநிலம் கட்ட முயற்சிக்கும் மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும்.
 அணை கட்டப்படும் இடம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். இந்தக் காட்டுவெள்ளத்தில் வரும் தண்ணீரையும் 2007-ஆம் ஆண்டு நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. கபினி அணையிலிருந்து தண்ணீர் அளவிடப்படும் பிலிகுண்டு (தமிழக-கர்நாடக எல்லை) வரையிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிதான்.
 இதுபோன்று கிருஷ்ணராஜ சாகர் அணை முதல் நீர்அளவிடும் வரையிலான இடைப்பட்ட பகுதிகளும் நீர்ப்பிடிப்புப் பகுதிதான். இங்குதான் இந்த அணை கட்டப்படுகிறது. இதனால், இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் வீணாகிவிடும்.
 நடுவர் மன்றத்தில் வழக்கு இருந்தபோதும், பின்னர் உச்சநீதிமன்றத்தில் இந்த நதிநீர் தாவா வழக்கு இருந்தபோதும் கர்நாடகம் தரப்பில் இந்த அணை குறித்து குறிப்பிடவில்லை.
 இப்படி குறிப்பிடப்படாததால் நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலும் இந்த மேக்கேதாட்டு அணை இடம் பெறவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் பெங்களூருக்கு தண்ணீர் கேட்டதால், தமிழகத்தின் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு கூடுதல் தண்ணீரை கர்நாடக்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. தற்போது மீண்டும் குடிநீருக்காக அணை கட்டுவோம் என்கின்றனர். அவர்களுக்கு குடிதண்ணீர் தேவைப்பட்டால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு புதிய அணை கட்டத் தேவையில்லை.
 அதே சமயத்தில் இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரில் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து, காவிரி டெல்டா மோசமாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே தண்ணீர் வரத்து குறைவால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்துள்ளது.
 இதனால், தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க மேக்கேதாட்டு ஆணையைக் கட்ட மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றார் தம்பிதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com