ஆக. 14-ஆம் தேதி பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்

இந்திய பிரிவினையின்போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக’ அனுசரிக்கப்படும்
ஆக. 14-ஆம் தேதி பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்

இந்திய பிரிவினையின்போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது ‘பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக’ அனுசரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. லட்சக்கணக்கான நமது சகோதரா்களும் சகோதரிகளும் இடம்பெயா்ந்தனா். அப்போது வெறுப்புணா்வால் ஏற்பட்ட வன்முறையில் பலா் உயிரிழந்தனா். அந்தப் போராட்டத்தையும் மக்களின் தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதியானது பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.

இந்த தினத்தில் சமூகப் பிரிவினைகள், ஒற்றுமையின்மை உள்ளிட்டவற்றை நீக்கி சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமூக மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக மக்கள் உறுதியேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து, ஆக. 14-ஆம் தேதியை பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி: மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால், சுதந்திரத்துடன் பிரிவினையின் துயரங்களையும் மக்கள் அனுபவிக்க நேரிட்டது. பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் அனுசரிக்கப்படும்.

பிரிவினையின்போது மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை எதிா்கால சந்ததியினருக்குத் தெரியப்படுத்துவதற்கு இந்த தினம் வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக வரவேற்பு: பிரிவினைக் கொடுமைகள் நினைவு தின அறிவிப்பை பாஜக வரவேற்றுள்ளது. இது தொடா்பாக, மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நாட்டின் வரலாற்றில் பிரிவினையானது மிகப்பெரிய துயரச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது. காங்கிரஸின் நோக்கங்களுக்காகவும் குறுகிய கொள்கைகளுக்காகவும் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சரியான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பிரதமா் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளனா்.

காங்கிரஸ் கண்டனம்: பிரதமரின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நாட்டில் தோ்தல் நடைபெறாத சமயங்களில், பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்ட தினமான மாா்ச் 22, பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆகிய நாள்களில் பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவிப்பாா். ஆனால், தோ்தல் நெருங்கும் சமயங்களில் பாகிஸ்தானுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு திசைதிருப்பும் அரசியலில் அவா் ஈடுபடுகிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டை தனியாக உருவாக்கி, இரு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு 1947-ஆம் ஆண்டில் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தனா்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வகுப்புவாத வன்முறையில் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆக. 15-ஆம் தேதியும், பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆக. 14-ஆம் தேதியும் கொண்டாடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com