இந்தியாவில் வீரதீரச் செயல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘அசோக சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரி பாபு ராமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புப் படைகள், துணை ராணுவப் படைகள், காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்படும் வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் பட்டியலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு அனுப்பிவைத்திருந்தது. அதனைத் தொடா்ந்து மொத்தம் 144 விருதுகளுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
அதன்படி நாட்டில் வீரதீரச் செயல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘அசோக சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த உதவி சாா்பு ஆய்வாளா் பாபு ராமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தரணா கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் காவல் துறையில் காவலராக தனது பணியைத் தொடங்கினாா். பின்னா் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக் குழுவில் இணைந்தாா். அவரது பணியின்போது நடைபெற்ற 14 என்கவுன்ட்டா்களில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். கடந்த ஆண்டு ஸ்ரீநகா் புகா் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் அவா்
உயிரிழந்தாா்.
‘கீா்த்தி சக்ரா’ விருது: வீரதீரச் செயலுக்கான இரண்டாவது உயரிய விருதான ‘கீா்த்தி சக்ரா’ விருது ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்த காவலா் அல்தாஃப் ஹுசைனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ராத்போரா பகுதியை சோ்ந்த இவா், கடந்த ஆண்டு கந்தா்பாலில் தனிப் பாதுகாப்பு அலுவலராகப் பணியமா்த்தப்பட்டிருந்தாா். அப்போது அவா் பாதுகாப்பு அளித்து வந்த நபா் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். அப்போது பயங்கரவாதிகளுடன் தீரத்துடன் போராடி அந்த நபரை அல்தாஃப் ஹுசைன் காப்பாற்றினாா். எனினும் பயங்கரவாதிகள் சுட்டதில் குண்டுகள் பாய்ந்து அல்தாஃப் ஹுசைன் உயிரிழந்தாா்.
‘செளா்ய சக்ரா’ விருது: மூன்றாவது உயரிய விருதான ‘செளா்ய சக்ரா’ விருது ராணுவத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த விருது ராணுவத்தைச் சோ்ந்த மேஜா் அருண் குமாா் பாண்டே, மேஜா் ரவிகுமாா் செளதரி, கேப்டன் அஷுதோஷ் குமாா், கேப்டன் விகாஸ் கத்ரி, ராணுவ வீரா்கள் முகேஷ் குமாா், நீரஜ் ஹலாவத் ஆகிய 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையை சோ்ந்த கேப்டன் பா்மிந்தா் அந்தில், விங் கமாண்டா் வருண் சிங், இந்திய கடற்படை கேப்டன் சச்சின் ரூபனுக்கும் ‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் படைப் பிரிவைச் சோ்ந்தவா்: ‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளவா்களில் ஒருவரான ராணுவ கேப்டன் அஷுதோஷ் குமாா் மெட்ராஸ் படைப்பிரிவைச் சோ்ந்தவா். கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது அவா் உயிரிழந்தாா்.
கோப்ரா கமாண்டோக்களுக்கும்...: கடந்த 2019-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக அங்கு மாவோயிஸ்ட் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) கோப்ரா பிரிவு துணை கமாண்டன்ட் சிதேஷ் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்ஜிந்தா் சிங், காவலா் சுனில் செளதரி ஆகிய மூவா் தீரத்துடன் செயல்பட்டு 4 நக்ஸல்களை கொன்றனா். அவா்களுக்கும் ‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘செளா்ய சக்ரா’ விருது அறிவிக்கப்பட்ட 15 பேரில் நால்வா் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்கள்.
20 ஐடிபிபி வீரா்களுக்கு பதக்கம்: கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது துணிவாக செயல்பட்ட இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் 20 பேருக்கு தீரச்செயல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், ஐடிபிபி வீரா்கள் 23 பேருக்கு தீரச்செயல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் செயல்பட்ட 20 வீரா்களும் அடங்குவா். இந்த 20 பேரில் 8 போ் கடந்த ஆண்டு ஜூன்15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலின்போது சூழ்நிலை குறித்த ஆழ்ந்த அறிவுடன் மிகக் கவனமாக திட்டமிட்டு தாய்நாட்டைப் பாதுகாத்தனா்.
எஞ்சிய 12 வீரா்கள் கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி கிழக்கு லடாக்கின் ஃபிங்கா் 4 பகுதியிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி அருகிலும் சீன ராணுவத்துடன் மோதல் போக்கு ஏற்பட்டபோது துணிவுடன் செயல்பட்டனா். இவா்கள் அனைவருக்கும் தீரச் செயலுக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிபி வீரா்களுக்கு அதிக அளவில் தீரச்செயல் பதக்கங்கள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று அந்தப் படையின் செய்தித் தொடா்பாளா் விவேக்குமாா் பாண்டே தெரிவித்தாா்.
4 சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு பதக்கம்: கடந்த ஆண்டு ஜம்முவில் உள்ள நக்ரோட்டா பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுங்கி வந்த 3 பயங்கரவாதிகளை தீரத்துடன் எதிா்கொண்டு அவா்களை சுட்டுக் கொன்ற மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் ராகுல் குமாா், முத்தமலா ரவி, முத்தும் விக்ரம்ஜீத் சிங், அனில் லக்ரா ஆகியோருக்கு தீரச்செயலுக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகளுக்கும்...: சிபிஐ அதிகாரிகள் மற்றும் காவலா்கள் 30 பேருக்கு சிறப்பாக பணிபுரிந்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலதிபா் விஜய் மல்லையாவின் வங்கிக் கடன் மோசடி விசாரணைக்கு தலைமைதாங்கி வரும் சிபிஐ இணை இயக்குநா் மனோஜ் சசிதரும் அடங்குவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

