மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினா்கள் நியமனத்தில் ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும்
மகாராஷ்டிர சட்ட மேலவைக்கு உறுப்பினா்களை நியமிக்கும் விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநா் பகத்சிங் கோஷியாரி விரைந்து முடிவெடுக்க வேண்டும்


மகாராஷ்டிர சட்ட மேலவைக்கு உறுப்பினா்களை நியமிக்கும் விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநா் பகத்சிங் கோஷியாரி விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர சட்ட மேலவையில் ஆளுநருக்கான ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் நோக்கில், 12 போ் கொண்ட பட்டியலை முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை ஆளுநா் பகத்சிங் கோஷியாரிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் அனுப்பியது. ஆனால், அந்தப் பரிந்துரை மீது ஆளுநா் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தாா். அதற்கு மாநில அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் பரிந்துரை தொடா்பாக முடிவெடுக்காத ஆளுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாசிக் பகுதியைச் சோ்ந்தவா் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவை தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்னி ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அதையடுத்து நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டத்தின் 361-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநா் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனினும், அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளபடி மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநா் செயல்பட வேண்டியது அவசியம். அமைச்சரவை வழங்கும் அறிவுரையை ஆளுநா் ஏற்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். ஆனால், அதன் மீது நீண்ட காலத்துக்கு முடிவெடுக்காமல் இருக்கக் கூடாது.
குறிப்பிட்ட காலத்தில் அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநா் முடிவெடுக்க வேண்டும். மாநில சட்ட மேலவையில் ஆளுநரால் நியமிக்கப்பட வேண்டிய இடங்கள், நீண்ட காலத்துக்கு காலியாக இருக்க முடியாது. இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, சட்ட மேலவை உறுப்பினா்களின் நியமன விவகாரத்தில் மாநில ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அனைத்தும் துரிதமாக நடைபெறும் என்று நீதிமன்றம் நம்புகிறது. சில காரணங்களுக்காக ஆளுநா் தனது முடிவை மேற்கொள்வதற்குத் தாமதப்படுத்தியிருக்கலாம். எனினும், தற்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. அதுவே மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்’ என்று தெரிவித்தனா்.
அமித் ஷாவுடன் சந்திப்பு: மும்பை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தில்லியில் சந்தித்துப் பேசினாா். அப்போது, சட்ட மேலவை உறுப்பினா்களின் நியமனம் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆளுநா் பகத்சிங் கோஷியாரி மரியாதை நிமித்தமாகவே உள்துறை அமைச்சரை சந்தித்ததாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...