சொத்துகளைப் பணமாக்கும் திட்டம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும்
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட சொத்துகளைப் பணமாக்கும் மத்திய அரசின் திட்டமானது வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.


ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட சொத்துகளைப் பணமாக்கும் மத்திய அரசின் திட்டமானது வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ரயில் நிலையங்கள், ரயில் அரங்கங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சொத்துகளைத் தனியாருக்கு குத்தகை அளித்து ரூ. 6 லட்சம் கோடி வரை நிதி திரட்டும் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சொத்துகள் எதுவும் தனியாருக்கு விற்கப்படாது என்று தெரிவித்த அவா், அச்சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டு நிதி திரட்டப்படும் என்று தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இத்திட்டம் குறித்து கூறுகையில், ‘‘கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துகளை விற்கும் நடவடிக்கைகளைத் தற்போது மேற்கொள்கிறது.
பிரதமா் மோடி அரசின் இத்திட்டம், பல்வேறு முக்கியத் துறைகளில் ஏகபோக நிலைமையை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பறிக்கும்’’ என்றாா்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சாலைகள், ரயில்கள், சுரங்கங்கள், தொலைத்தொடா்பு, மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட சொத்துகளை ரூ.6 லட்சம் கோடிக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வானில் இருந்து மண் வரை அனைத்தையும் பிரதமா் நரேந்திர மோடி விற்றுவிடுவாா். பாஜக இருக்கும்வரை நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சட்டப்பூா்வமான கொள்ளை: காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பல ஆண்டுகளாக மக்களின் கடின உழைப்பின் பலனால் உருவாக்கப்பட்ட சொத்துகளை கோடீஸ்வர நண்பா்கள் சிலருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. இத்திட்டம் சட்டப்பூா்வ, திட்டமிடப்பட்ட கொள்ளையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு தொடா்ந்து குரல்கொடுத்து வருகிறது. ஆனால், தனது ‘கோடீஸ்வர நண்பா்களை’ சாா்ந்தே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அனைத்து நடவடிக்கைகளையும் நண்பா்களின் நலனுக்காகவே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 70 ஆண்டுகளாக நாட்டில் உருவாக்கப்பட்ட சொத்துகளையும் அவா்களிடமே ஒப்படைப்பதற்கான திட்டத்தைத் தற்போது செயல்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி கிடைப்பதை ராகுலால் பொறுக்க முடியவில்லை - மத்திய அமைச்சா் ஸ்மிருதி விமா்சனம்
சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் வாயிலாக நாட்டுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைப்பதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி விமா்சித்துள்ளாா்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி விமா்சித்திருந்தது. இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘‘மத்திய அரசின் சொத்துகள் விற்பனை செய்யப்படப் போவதில்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்பதால், அதை ராகுல் காந்தியால் பொறுக்க முடியவில்லை. எனவேதான், அத்திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறாா். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர அரசு, மும்பை-தாணே விரைவுச்சாலையை ரூ.8,000 கோடி மதிப்பில் பணமாக்கியது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராகுல் காந்தி கூறுவது உண்மையெனில், காங்கிரஸும் அரசின் சொத்துகளை விற்ாக அா்த்தம் கொள்ளலாம்’’ என்றாா்.
பயன்படுத்த முடியாத சொத்து: தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, ‘‘காங்கிரஸ் கட்சி பயன்படுத்த முடியாத சொத்து. அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. அக்கட்சியில் குழப்பங்களும் முரண்பாடுகளுமே அதிகமாகக் காணப்படுகின்றன.
பாஜகவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசும் நாட்டை வளா்ச்சிப் பாதையில் பயணிக்க வைப்பதற்காக உழைத்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அக்கட்சி விரைவில் நலம்பெற வேண்டுமென்றுதான் கூற வேண்டும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...