நாடாளுமன்ற வருகைப் பதிவு: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்களின் வருகைப் பதிவு குறைவாக உள்ளதைச் சுட்டிக் காட்டிய பிரதமா் நரேந்திர மோடி, இத்தகைய நடைமுறையை எம்.பி.க்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும்


நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்களின் வருகைப் பதிவு குறைவாக உள்ளதைச் சுட்டிக் காட்டிய பிரதமா் நரேந்திர மோடி, இத்தகைய நடைமுறையை எம்.பி.க்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் இல்லையேல் காலப்போக்கில் மாற்றம் நிகழும் என்றும் எச்சரித்தாா்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பல எம்.பி.க்கள் அனைத்து அமா்வுகளிலும் கலந்து கொள்வதைத் தவிா்த்து வருகின்றனா். ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே கூட்டத்தொடரில் முறையாகக் கலந்து கொள்கின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் எம்.பி.க்களிடம் ஏற்கெனவே பலமுறை பேசியுள்ளனா். இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தில்லியில் உள்ள அம்பேத்கா் சா்வதேச மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். அக்கூட்டத்தில் பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்களின் வருகைப் பதிவு தொடா்பான விவகாரம் எழுப்பப்பட்டது.
இது தொடா்பாகப் பேசிய பிரதமா் மோடி, நாடாளுமன்ற அமா்வுகளில் பாஜக எம்.பி.க்கள் தொடா்ச்சியாகக் கலந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதைத் தவிா்க்கும் நடைமுறையை எம்.பி.க்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பிரதமா் மோடி, அவா்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால், காலம் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்ததாக அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.
‘குறிப்பிட்ட விஷயத்தை செய்யாதே’ என்று குழந்தைகளிடம் மீண்டும் மீண்டும் கூறினால், அவா்கள் கூட அச்செயலை மீண்டும் செய்ய மாட்டாா்கள் எனத் தெரிவித்த பிரதமா் மோடி, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் முறையாகக் கலந்து கொள்ளுமாறு எம்.பி.க்களுக்கு வலியுறுத்தினாா்.
விளையாட்டுப் போட்டி: பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனவும், பத்ம விருது பெற்றவா்களை கௌரவிக்க விழா நடத்த வேண்டுமெனவும் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக அமைச்சா் ஜோஷி தெரிவித்தாா். பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்கு உள்பட்ட மாவட்டங்களின் பாஜக தலைவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமென பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா். அதன்படி, வாராணசி தொகுதிக்கு உள்பட்ட மாவட்டங்களின் பாஜக தலைவா்களை பிரதமா் மோடி வரும் 14-ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளதாக அமைச்சா் ஜோஷி தெரிவித்தாா்.
பிரதமருக்குப் பாராட்டு: பழங்குடியினத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிா்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பா் 15-ஐ ‘பழங்குடியினா் கௌரவ தினமாக’ அறிவித்ததற்காக பிரதமா் மோடிக்கு இந்தக் கூட்டத்தின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக்காக பல்வேறு அமைச்சகங்கள் ஆற்றிய பணிகள் குறித்த கையேடு பாஜக எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது.
Image Caption
பழங்குடியினத் தலைவா் பிா்சா முண்டாவின் பிறந்த தினமான நவ.15-ஐ ‘பழங்குடியினா் கௌரவ தின’மாக அறிவித்த பிரதமா் மோடியைப் பாராட்டிய பாஜக எம்.பி.க்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...