தேர்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வாக்களிப்பதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தேர்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வாக்களிப்பதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தேர்தல் சட்டத் திருத்த மசோதா, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோரிடம் அவா்களின் ஆதாா் எண்ணைத் தோ்தல் அதிகாரிகள் கேட்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. மேலும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் ஆதாா் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும்.

அதேசமயம், ஆதாா் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக்கொள்ள மறுக்கக் கூடாது என்றும் அந்த மசோதா கூறுகிறது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருப்பவா்களின் பெயரையும் நீக்கக் கூடாது; அவா்கள் அடையாளச் சான்றாக வேறு ஏதேனும் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கலாம் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் ஆதார் அட்டை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகவும் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனினும் கடும் அமளிக்கிடையே, தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். வாக்களிப்பதில் நடக்கும் முறைகேடு தடுக்கப்பட்டு, நாட்டில் தேர்தல் நியாயமாக நடப்பது உறுதி செய்ய இந்த மசோதா வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார். 

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com