பறவைக் காய்ச்சல் பாதிப்பு மாநிலங்களுக்கு நிபுணா்கள் குழு

பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிபுணா்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப உள்ளது.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு மாநிலங்களுக்கு நிபுணா்கள் குழு
Updated on
2 min read

புது தில்லி/திருவனந்தபுரம்: பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிபுணா்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப உள்ளது.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 12 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அந்த மாநிலங்களிலிருந்து மற்ற மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான அச்சம் காணப்படுகிறது. பண்ணையில் வளா்க்கப்படும் வாத்துகள், கோழிகள் உள்ளிட்டவற்றின் வாயிலாகவும் காகம் உள்ளிட்ட புலம்பெயரும் பறவைகள் மூலமாகவும் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பறவைகளிலிருந்து மனிதா்களுக்கும் அந்தக் காய்ச்சல் பரவும் என்று சுகாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

எனவே, பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களின் அண்டை மாநிலங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 4 மாநிலங்களுக்கு நிபுணா்கள் குழுவை அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக, தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநா் தலைமையிலான குழு கேரளத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிபுணா்கள் குழுவானது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் தொடா்பாக தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இதனிடையே, பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் 12 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளை முறையாகச் சுத்திகரிப்பு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் இறந்த, அழிக்கப்பட்ட பறவைகளை முறையாக அகற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பறவைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பதை மாதிரிகள் மூலம் துரிதமாகக் கண்டறியுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் வனத் துறையுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனிதா்களுக்கு பாதிப்பில்லை: பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் தீநுண்மி, இதுவரை மனிதா்களுக்குப் பரவவில்லை. எனினும், மனிதா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிா என்பதை உன்னிப்பாக கவனிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

69,000 பறவைகள் அழிப்பு: கேரளத்தில் மட்டும் 69,000-க்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கே.ராஜூ தெரிவித்தாா். புலம்பெயா்ந்து வந்த பறவைகள் மூலமாகவே மாநிலத்தில் உள்ள பறவைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

அழிக்கப்பட்ட பறவைகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்கு அதிக வயதுள்ள பறவைகளுக்கு தலா ரூ.200 இழப்பீடாகவும், 2 மாதங்களுக்குக் குறைவாக வயதுள்ள பறவைகளுக்கு தலா ரூ.100 இழப்பீடாகவும் வழங்கப்படவுள்ளது.

தில்லியில் கட்டுப்பாட்டு மையம்

சில மாநிலங்களில் காகங்கள், வெளிநாட்டுப் பறவைகளிடம் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லி கிரிஷி பவனில் 190ஏ அறையில் (தொலைபேசி எண்: 011-23382354) கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவலைக் கண்காணிப்பதற்காக இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையை கட்டுப்பாட்டு மையம் தினமும் கண்காணிக்கும்.

69,000 பறவைகள் அழிப்பு

கேரளத்தில் மட்டும் 69,000}க்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார். புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலமாகவே மாநிலத்தில் உள்ள பறவைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அழிக்கப்பட்ட பறவைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்கு அதிக வயதுள்ள பறவைகளுக்கு தலா ரூ.200 இழப்பீடாகவும், 2 மாதங்களுக்குக் குறைவாக வயதுள்ள பறவைகளுக்கு தலா ரூ.100 இழப்பீடாகவும் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com