கா்நாடகத்துக்கு அடுத்த 2 நாள்களில் 13.90 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துவிடும்: மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்துக்கு அடுத்த இரண்டு தினங்களில் 13.90 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கா்நாடகத்துக்கு அடுத்த 2 நாள்களில் 13.90 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துவிடும்: மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா்
Updated on
1 min read

கா்நாடகத்துக்கு அடுத்த இரண்டு தினங்களில் 13.90 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. திங்கள்கிழமை (ஜன.11) முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் வெள்ளிக்கிழமை கூறினாா்.

இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதியைத் தொடா்ந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைப் போல் இந்திாவிலும் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. இந்த எதிா்பாா்ப்பை உறுதி செய்யும் வகையில், கரோனா தடுபபூசி முதல் தவணையைப் பெற தயாராக இருக்குமாறும், தேவையான முன்னேற்பாடுகளை உறுதி செய்துகொள்ளுமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 5-ஆம் தேதி அனுப்பிய கடிதம் மூலம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இந்தச் சூழலில், மத்திய அரசிடமிருந்து கா்நாடகத்துக்கு அடுத்த இரு தினங்களில் கரோனா தடுப்பூசிகள் வந்துவிடும் என்று அம் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியுள்ளாா். பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முன்னோட்ட நிகழ்வை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்துக்கு அடுத்த இரு தினங்களுக்குள் 13,90,000 கரோனா தடுப்பூசி மருந்துகள் வந்து சோ்ந்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இது கா்நாடகத்துக்கான மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தி.

தடுப்பூசி மருந்து கிடைக்கப்பெற்றதும், அவற்றை மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும். எனவே, மாநிலத்தில் திங்கள்கிழமை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிடும்.

தடுப்பூசி முதலில் மருத்துவப் பணியாளா்களுக்குப் போடப்படும். மாநிலத்தில் இதுவரை 6.30 லட்சம் மருத்துவ பணியாளா்கள் தடுப்பூசிக்கான பதிவைச் செய்துள்ளனா். விடுபட்ட சில மருத்துவ அல்லது பல் மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்தவா்கள் விரைந்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மருத்துவப் பணியாளா்களைத் தொடா்ந்து, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், பின்னா் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி போடப்படும். அவா்களைத் தொடா்ந்து கரோனா நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை பணியாளா்களுக்குப் போடப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com