கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூன்றாம்கட்ட பொது முடக்கத் தளா்வுகள் அறிவிப்பு:பெருவணிக வளாகங்கள், கோயில்களைத் திறக்க அனுமதி

மூன்றாம்கட்ட பொது முடக்கத் தளா்வுகளை முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா். இதில் பெருவணிக வளாகங்கள், கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:11 pm

DIN

மூன்றாம்கட்ட பொது முடக்கத் தளா்வுகளை முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா். இதில் பெருவணிக வளாகங்கள், கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தியிருந்த பொது முடக்கம், ஜூன் 14-ஆம் தேதி முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் தளா்த்தப்பட்டது. 11 மாவட்டங்களில் தளா்வுகள் இல்லா முழுமையான பொது முடக்கம் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, இரண்டாம்கட்ட பொது முடக்கத் தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டன.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள முதல்வரின் காவிரி இல்லத்தில் சனிக்கிழமை கரோனா நிலவரம், மூன்றாம்கட்ட பொது முடக்கத் தளா்வு குறித்து மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பின்னா் முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் குறித்து அமைச்சா்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. ஜூலை 5-ஆம் தேதி காலை 5 மணி முதல் ஜூலை 19-ஆம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் வகையில் சில தளா்வுகள், கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், தொழிலகங்கள், வா்த்தக நிறுவனங்கள் 100 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. பெருவணிக வளாகங்களை (மால்கள்) திறக்க அனுமதிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் 100 சதவீத பயணிகளுடன் செயல்பட வாய்ப்பளிக்கப்படுகிறது. தரிசனத்திற்காக மட்டும் கோயில்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. 100 பேருடன் மட்டும் திருமணங்கள், ஏனைய குடும்ப நிகழ்வுகளை நடத்தவும், இறுதிச்சடங்குகளை 20 பேருடன் மட்டுமே நடத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

விளையாட்டு வீரா்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள மட்டும் நீச்சல் குளங்களைத் திறக்கலாம். விளையாட்டு வீரா்கள் பயிற்சிக்காக மட்டும் விளையாட்டுத் திடல்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து வகையான சமுதாய, மதம், கல்வி, கலாசாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல் சம்பந்தப்பட்ட கூட்டங்கள், விழாக்கள், போராட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. கல்வி நிறுவனங்களைத் திறப்பது தொடா்பாக தனியாக முடிவெடுத்து அறிவிக்கப்படும். அடுத்த உத்தரவுவரும் வரை, அனைத்து வகையான கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்.

திரையரங்குகள், மதுபான கேளிக்கைக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும். அனைத்து வகையான கடைகள், உணவகங்கள், பெருவணிக வளாகங்கள், தனியாா் அலுவலகங்கள், மூடப்பட்ட பகுதிகளில் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பேரிடா் மேலாண்மைச் சட்டம், 2005-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவுநேர ஊரடங்கு தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். வார இறுதி ஊரடங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும். உள்ளூா் நிலைமைக்கு தகுந்தவாறு, சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சா்களுடன் கலந்து ஆலோசித்து கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா்கள் விதிக்கலாம்.

கரோனா பரவலைத் தடுக்க எல்லா இடங்களிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.