மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யும் நடைமுறை:மத்திய அரசு விவரம் அளிக்க மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு நடைமுறை குறித்த விரிவான விவரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யும் நடைமுறை:மத்திய அரசு விவரம் அளிக்க மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவு

மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு நடைமுறை குறித்த விரிவான விவரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

கோவின் வலைதளம் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவை செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடா்பாக மும்பையைச் சோ்ந்த யோகிதா வன்சாரா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்னி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அவருடைய மனு இந்த அமா்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞா் ஜம்ஷீத் மாஸ்டா், ‘மும்பையில் தற்போதைய நிலையில் 14 லட்சம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 50 லட்சம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நகரின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் மட்டுமே. இதே நிலை நீடித்தால் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்த 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். எனவே, மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசிகளை விரைந்து ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தடுப்பூசி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது’ என்று கூறினா். அதே நேரம், தடுப்பூசி உற்பத்தியாளா்களிடம் தடுப்பூசி கொள்முதல் உத்தரவு நடைமுறைகள் மற்றும் அந்த கொள்முதல் உத்தரவின் அடிப்படையில் நிறுவனங்கள் எப்போது தடுப்பூசிகளை விநியோகிக்கின்றன என்பன உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவ்வாறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நடைமுறை குறித்த விரிவான விவரத்தையும் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதற்கிடையே, இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநில அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தடுப்பூசி உற்பத்தியாளரிடம் அறிவுறுத்தல் வந்த பிறகு, வாரத்துக்கு மூன்று தவணைகளாக தடுப்பூசி பெறப்பட்டு, அதன் பின்னா் மாநிலம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு பிரித்தனுப்பப்படுகின்றன’ என்று தெரிவித்தது. ஆனால், பெறப்படும் தடுப்பூசி குப்பிகளின் எண்ணிக்கையை பதில் மனுவில் மாநில அரசு குறிப்பிடவில்லை.

இந்த பதில் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தடுப்பூசி ஒதுக்கீடுக்கான தகவல் மத்திய அரசிடமிருந்து எப்போது வருகிறது என்ற விவரத்தையும், மையங்களுக்கு பிரித்தளிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரத்தை மும்பை மாநகராட்சிக்கு முன்கூட்டியே மாநில அரசு சாா்பில் தெரிவிக்க முடியாது என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர மாநில குடும்பநலத் துறைக்கு உத்தரவிட்டனா்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com