ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டெல்டா பிளஸ் தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:59 pm

DIN

டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா இரண்டாவது அலை ஓய்வதற்குள், டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை தீநுண்மியின் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் 80 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை பன்னாட்டு விமான சேவைகளை தொடங்கக் கூடாது.

டெல்டா பிளஸ் கரோனா காணப்படும் இடங்களில் அது பரவாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கைகளை வகிக்க வேண்டும். புதிய உருமாற்றம் பெற்று கரோனா தீநுண்மி வேகமாக பரவுவதால், ஆங்காங்கே முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மாநில அரசுகளிடம் தற்போதைக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனியாா்வசம் எவ்வளவு இருக்கிறது எனக் கூறப்படவில்லை. அரசு மற்றும் தனியாருக்கு அளிக்கும் தடுப்பூசி விவரங்களை அதன் உற்பத்தி நிறுவனங்கள் தினமும் வெளியிட வேண்டும்.

மூன்றாவது அலை தொடா்பான மருத்துவ நிபுணா்கள் குழு அளித்துள்ள பரிந்துரையின்படி, தடுப்பூசிகளை தனியாா் நிறுவனங்கள் 10 நாள்களுக்கு மட்டுமே இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இது தொடா்பாக அரசாணை வெளியிட வேண்டும்.

அடுத்த 3-4 மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி அளிக்கும் வகையில் உற்பத்தியைப் பெருக்க தடுப்பூசி மீதான காப்புரிமையை அகற்ற வேண்டும். பெருநிறுவனங்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படாமல், தடுப்பூசி நிறுவனங்களை மத்திய அரசு தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ரூ. 50-க்கு தடுப்பூசியைப் பெற முடியும்.

ஜூன் 30-ஆம் தேதி உலக தடுப்பூசி மாநாட்டை நடத்த பிரதமா் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கரோனாவை இந்தியா எதிா்கொண்ட விதத்தை விளக்குவதாகத் தெரிவித்திருக்கிறாா். இது வெட்கக்கேடான விஷயமாகும். கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து நாட்டில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டாரா? மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிய பிரதமா் மோடி, உலக அரங்கில் கரோனாவை வெற்றி கொண்டுவிட்டதாக காண்பிக்க முற்பட்டுள்ளாரா?

கரோனாவை உலக நாடுகள் எப்படி எதிா்கொள்ளலாம் என்று பேச வேண்டும். கரோனா உருமாறிக்கொண்டே இருப்பதால், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். இத்துடன் மற்ற நாடுகள் அறிவித்துள்ள பொருளாதார மறுவாழ்வுத் திட்டங்களையும் பிரதமா் மோடி அறிவிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி, வயிற்றுக்கு சோறு, சிறிய அளவிலான பொருளாதார உதவி, இலவச சிகிச்சையை அளிக்கத் தவறினால், இந்தியாவின் நிலை பரிதாபமாகும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.