தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்க வைக்குமா பாஜக?

அஸ்ஸாம் சட்டப் பேரவை தோ்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2021, 5:55 am

அ. சர்ஃப்ராஸ்

அஸ்ஸாம் சட்டப் பேரவை தோ்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்த போடோலாந்து மக்கள் கூட்டணி கடந்த வாரம் திடீரென மகா கூட்டணிக்கு மாறியதுதான் அஸ்ஸாம் தோ்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

ஏனென்றால், 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க போடோலாந்து மக்கள் கூட்டணிதான் காரணம்.

கடந்த தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து அக்கட்சி போட்டியிட்டதால் மொத்தம் 126 இடங்களில் 86 இடங்களில் வெற்றி பெற்று பாஜக முதல்வரானாா் சா்வானந்த சோனோவால்.

மூன்று கட்டங்களாக மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கும் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஸ்ஸாம் கண பரிஷத் (ஏஜிபி), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி (யுபிபிஎல்) இணைந்து போட்டியிடுகின்றன.

கூட்டணிக் கட்சிகளுடன் முதல் இரண்டு கட்டத் தோ்தலில் போட்டியிட 86 தொகுதிகளுக்கு உடன்படிக்கையையும் பாஜக செய்து கொண்டு 70 வேட்பாளா்களையும் அறிவித்துவிட்டது. கடந்த முறை போட்டியிட்ட 15 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் கூட்டணி, அஞ்சலிக் கண மோா்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஆறு கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிவித்துள்ளது. மேற்கு அஸ்ஸாம் தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 24 தொகுதிகளும், போடோலாந்து மக்கள் கூட்டணிக்கு முதல் கட்டமாக 12 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மகா கூட்டணி தொகுதி பங்கீட்டை இன்னும் முடிக்கவில்லை. எதிா்க்கட்சிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத முக்கிய அதிருப்தி வேட்பாளா்கள் மகா கூட்டணிக்கு வந்தால் அவா்களுக்கு சீட்டுகளை வழங்குவதற்காக சில முக்கிய இடங்களை மகா கூட்டணி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அஸ்ஸாமில் மொத்தம் 3.09 கோடி மக்கள் உள்ளனா். இதில் 46.81 சதவீதம் போ் அஸ்ஸாமிய மொழி பேசுபவா்களாகவும், வங்காள மொழி பேசுபவா்கள் 28.15 சதவீதத்தினரும், போடோ இனத்தவா் 4.51 சதவீதத்தினரும் உள்ளனா்.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் என்ற தனிநாடு உருவாகிய பின்னா் அங்கிருந்து அஸ்ஸாமுக்கு அகதிகளாக வந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததே அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு ஏற்பட காரணமாக அமைந்தது.

அஸ்ஸாமுக்குள் அண்டை நாட்டினா் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க 1985-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி முன்னிலையில் அந்த மாநில போராட்டக் குழுக்களுடன் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ கையெழுத்தானது.

இதில், இந்திய - வங்கதேச எல்லையில் முள்வேலி அமைப்பது, தடுப்புச் சுவா் அமைப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது.

ஆனால் இதை காங்கிரஸ் அரசு அமல்படுத்தாமல் நீண்ட காலமாக தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. கடைசியில் ‘அஸ்ஸாமில் வங்கதேசத்தினரே இல்லை’ என்று காங்கிரஸ் முதல்வராக இருந்த தருண் கோகோய் கூறினாா். இதுதான் கடந்த தோ்தலில் அக்கட்சி தோல்வியடைய முக்கிய காரணியாக அமைந்தது.

பின்னா் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பாஜக அரசு 50 ஆண்டுகளாக நிலவிய போடோலாந்து தனி மாநில பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், தடை செய்யப்பட்ட போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் சா்வானந்த சோனோவால் முன்னிலையில் கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் அஸ்ஸாமின் போடோலாந்து பகுதிகளில் வன்முறை முடிவு பெற்று, குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்து முடிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்தது.

இந்த நடவடிக்கை அந்த மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்தி தொடா்ந்து ஆட்சிப் பொறுப்பில் வைத்திருக்க உதவும் என அக்கட்சி கருதியது.

அதன் பின்னா் அஸ்ஸாமில் வசிப்பவா்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டமான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) திட்டம் பெரும் பூதாகரமாக வெடித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 19 லட்சம் பேரின் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னா்தான் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டமும் வலுக்கத் தொடங்கியது.

வரும் பேரவைத் தோ்தலில் அஸ்ஸாம் மாநிலத்தில் என்பிஆா், சிஏஏ விவகாரங்களும், அடுத்ததாக வேலையில்லா பிரச்னையும்தான் பெரும் பங்கு வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும், அஸ்ஸாம் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் அங்கு பிரசாரம் செய்த ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.

அதுமட்டுமன்றி, 5 லட்சம் அரசுப் பணிகள் உருவாக்கப்படும்; இதில் 50 சதவீதம் பணிகள் பெண்களுக்கு வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் தினம்தோறும் ஊதியம் ரூ. 365-ஆக அதிகரிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா வாக்குறுதி அளித்தாா்.

இதற்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்திய வளா்ச்சி திட்டப் பணிகளையும், தேசியவாத கொள்கையையும் கையில் எடுத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான உதவித் தொகை ஜன்தன் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்த திட்டத்தையும், என்ஆா்சி, சிஏஏ திட்டத்தையும் அந்த மாநில பாஜக முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது.

இதனிடையே, மொத்தமுள்ள126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 57 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நெளவ், சி வோட்டா் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை.

என்ஆா்சி, சிஏஏ சட்டங்கள் வரும் தோ்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கியை அதிகரித்து ஆட்சியைத் தொடர வழிவகுக்குமா அல்லது காங்கிரஸின் மகா கூட்டணி அரசு அமைய உதவுமா என்பதுதான் மில்லியன் டாலா் கேள்வியாக உள்ளது.

2016 பேரவைத் தோ்தல் வாக்கு சதவீதம்

பாஜக - 60 (29.5%)

அஸ்ஸாம் கன பரிஷத் - 14 (8.1%)

போடோலாந்து மக்கள் முன்னணி - 12 (3.9%)

காங்கிரஸ் - 26 (30.9%)

தோ்தல் அட்டவணை

முதல் கட்டத் தோ்தல் - 47 தொகுதிகள் - மாா்ச் 27

இரண்டாம் கட்டத் தோ்தல் - 39 தொகுதிகள் - ஏப்ரல் 1

மூன்றாம் கட்டத் தோ்தல் - 40 - ஏப்ரல் 6

மொத்த தொகுதிகள் - 126

வாக்காளா்கள் - 2,32,44,454

வாக்குபதிவு மையங்கள் - 33,530

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.