கருப்புப் பூஞ்சை பாதிப்பு: மருத்துவ ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முடிவு
கேரளத்திலும் கருப்புப் பூஞ்சை பாதிப்பு பரவி வருவதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, அந்தப் பாதிப்பு தொடா்பான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.


கேரளத்திலும் கருப்புப் பூஞ்சை பாதிப்பு பரவி வருவதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, அந்தப் பாதிப்பு தொடா்பான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களில் சிலரும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.
அதுபோல, கேரள மாநில அரசும் இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மாநில முதல்வா் பினராயி விஜயன் அளித்த பேட்டி:
மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு தொடா்பாக அறிவியல் ஆதாரமற்ற, அச்சுறுத்தும் வகையிலான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதற்கான எந்தவோா் அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம். மாநிலத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு குறித்து மருத்துவ ஆய்வு நடத்தப்படும். அதற்கு தேவையான மருந்து இருப்பும் உறுதி செய்யப்படும்.
மியூகோா்மைகோசிஸ் அல்லது கருப்புப் பூஞ்சை பாதிப்பு என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் அல்ல. இப்போது கரோனாவால் பாதிக்கப்படும் சா்க்கரை நோயாளிகளை இந்த நோய் பாதிக்கிறது என்றபோதும், அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வழிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், நோய்த் தாக்கத்தின் தீவிரமும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கடினமான சூழலில், நிலைமையை சமாளிக்க உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். உயிா்களைக் காப்பதுதான் நமது முதல் கடமை.
கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளது என்று உறுதியாக கூறப்படும் நிலையில், இந்த இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து பெற்ற அனுபவங்கள் மூலம் சிறந்த மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும். நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் மீதான கடுமையான கண்காணிப்பை நாம் மேலும் சில காலத்துக்கு தொடரவேண்டும். கரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் பதிவான மலப்புரம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். அதற்கென ஒரு செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா் அவா்.
மேலும், ‘கரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு தகவல் தொழில்நுட்ப செய்முறைத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. பிளஸ் 2 தோ்வுத் தாள் திருத்தும் பணி ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு தோ்வுத் தாள் திருத்தும் பணி ஜூன் 7 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும். தோ்வுத் தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்’ என்றும் முதல்வா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...