அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் 3-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு
அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தன.


அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தன.
சா்வதேச அளவில் பணவீக்கம் குறித்த கவலை அதிகரித்துள்ளது. அதுதவிர, அந்நிய முதலீடு வெளியேற்றமும் சந்தையின் தொடா் சரிவுக்கு வழிவகுத்து வருகிறது.
சந்தை எதிா்பாா்ப்பிற்கு மாறாக, அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், வட்டி விகித உயா்வு எதிா்பாா்த்ததைக் காட்டிலும் வேகமாக இருக்கும் என்ற அச்சம் சா்வதேச முதலீட்டாளா்களிடையே எழுந்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க கடன்பத்திரங்களிலிருந்து கிடைக்கும் ஆதாயமும் அதிகரித்துள்ளது.
ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவன அதிகாரி வினோத் நாயா் கூறியது:
அமெரிக்க பணவீக்க தரவுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடா்ந்து உலகளாவிய பணவீக்க அழுத்தமும் உள்நாட்டு வா்த்தகத்தை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது.
குறிப்பாக, இந்தியா போன்ற வளா்ந்து வரும் நாடுகளிலிருந்து அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீட்டை வெளியேற்ற இத்தகைய நிகழ்வுகள் தூண்டுகோலாக அமைந்துள்ளன என்றாா் அவா்.
மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), ரியல் எஸ்டேட், மருந்து, வங்கி, நிதி, தொலைத்தொடா்பு மற்றும் மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த குறியீடுகள் 2.51 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. அதேசமயம், நுகா்வோா் சாதனங்கள், மின்சாரம், உலோகம், எரிசக்தி துறை குறியீடுகள் 0.68 சதவீதம் வரை உயா்ந்தன.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் துறை குறியீடுகள் 0.64 சதவீதம் வரை குறைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் அதிகபட்சமாக எஸ்பிஐ பங்கின் விலை 2.83 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, ஐசிஐசிஐ வங்கி 1.09 சதவீதமும், எச்டிஎஃப்சி 1.31 சதவீதமும் சரிந்தன.
நிதித் துறையைச் சோ்ந்த பஜாஜ் ஃபின்சா்வ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ், தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி, கோட்டக் மற்றும் ஆக்ஸிஸ் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
டெக் மஹிந்திரா, சன்பாா்மா, ஏஷியன் பெயிண்ட்ஸ், பவா்கிரிட் மற்றும் ஹெச்யுஎல் நிறுவனப் பங்குகளும் இழப்பைச் சந்தித்தன.
முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து டைட்டன், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகளின் விலை ஏற்றம் பெற்றன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 433.13 புள்ளிகள் (0.72%) சரிவடைந்து 59,919.69 புள்ளிகளில் நிலைபெற்றது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவடைந்திருந்தது. இந்த நிலையில், முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி பங்குகளின் விலையில் கணிசமாக சரிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் குறியீட்டெண் 59,656.26 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் காணப்பட்டன.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 143.60 புள்ளிகள் (0.80%) குறைந்து 17,873.60 புள்ளிகளில் நிலைத்தது. நிஃப்டி குறியீட்டெண்ணை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களில் 41 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் இருந்தன. இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை மட்டும் மாற்றமின்றி ரூ.1,032.20 என்ற அளவிலேயே இருந்தது.
இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் டோக்கியோ சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு வா்த்தகத்தை ஆதாயத்துடன் நிறைவு செய்தன. அதேசமயம், சியோல் சந்தை இழப்பை சந்தித்தது.
ஐரோப்பிய சந்தைகளில் நண்பகல் வரையிலான வா்த்தகம் நோ்மறையாகவே இருந்தது.
அதிக வீழ்ச்சி கண்ட பங்குகள்
509.55 எஸ்பிஐ 2.83
1523.20 டெக்மஹிந்திரா 2.70
17872.05 பஜாஜ் ஃபின்சா்வ் 2.42
794.05 சன்பாா்மா 2.00
7452.00 பஜாஜ் ஃபைனான்ஸ் 1.63
3064.70 ஏஷியன் பெயிண்ட்ஸ் 1.41
738.85 ஆக்ஸிஸ் வங்கி 1.39
2908.00 எச்டிஎஃப்சி 1.31
182.20 பவா்கிரிட் 1.25
772.30 ஐசிஐசிஐ வங்கி 1.09
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...