கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் படம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் நரேந்திர மோடியின் படம் இடம் பெறுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் கேரள மாநில அரசுக்கும்
கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் படம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
Published on
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமா் நரேந்திர மோடியின் படம் இடம் பெறுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் கேரள மாநில அரசுக்கும் அந்த மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக முதியவரான பீட்டா் என்பவா் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், நான் இரு தவணை தடுப்பூசியை தனியாா் மருத்துவமனையில் பணம் செலுத்திக் கொண்டேன். ஆனால், அது தொடா்பாகத் தரப்படும் சான்றிதழில் என்னுடைய பெயா், வயது, தடுப்பூசி செலுத்திய தேதி, எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற விவரத்துடன் பிரதமரின் படமும் இடம் பெற்றுள்ளது. நானே பணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், அந்தச் சான்றிதழில் எனது தனிப்பட்ட விவரங்களும் எனக்குத் தேவையான விவரங்களும் மட்டுமே இடம் பெற்றால் போதுமானது. கூடுதலாக ஒரு படம் இடம் பெறுவது தனியுரிமை மீறலாகவும், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி என்.நகரேஷ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக அடுத்த விசாரணைக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் கேரள மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த நவ.3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சான்றிதழில் பிரதமா் படத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அபாயகரமானது என்று நீதிபதி தெரிவித்திருந்தாா். இதே போல, ‘தாங்கள் உழைத்து சோ்த்த பணத்தில் காந்திஜி படம் தேவையில்லை’ என்ற கோரிக்கையுடன் யாராவது வழக்கு தொடுக்கக் கூடும்; இதற்கு முடிவில்லாமல் போய்விடும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

அதற்கு பதிலளித்த மனுதாரா், தனது சொந்தப் பணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பிரதமரின் படம் தேவையில்லை என்றாா். மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, விசாரணை நவம்பா் 23 மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியிருந்தாா். இந்நிலையில், இரு அரசுகளும் பதில் மனு தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com