"நம் செயல்பாடுகளால் உலகுக்கு நாம் சொல்லவருவது என்ன?': தில்லி காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றம்

"இது தேசத்தின் தலைநகரம். இதன் மூலம் உலக நாடுகளுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்" என தில்லி காற்று மாசு குறித்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டும் என்றும் திடீரென மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உதவாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம், "மாசின் தரம் குறைந்தாலும் இதுகுறித்த வழக்கை தொடர்ந்து விசாரித்து உத்தரவகளை பிறப்பிப்போம். வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவது குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் நுண்ணிய மேலாண்மை செய்யாது. அபராதம் விதிக்கப்படுவது குறித்து அரசே முடிவுகளை எடுக்க வேண்டும்.

இது தேசிய தலைநகரம். இதன் மூலம் உலக நாடுகளுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை பாருங்கள். புள்ளி விவரங்களின் அடிப்படையில் நிலைமையை கணிக்க வேண்டும். மேலும் நிலைமை மோசமாகிவிடாமல் எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது சூப்பர் கணினிகள் எல்லாம் உள்ளன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் காற்று மாசை கணிக்க அமைப்பை உருவாக்குவது அவசியம்" என தெரிவித்தது.

கடந்த மூன்று வாரங்களாக, தில்லி மற்றும் அதன் அண்டை நகரங்களில், காற்றின் தரம் மோசமாக உள்ளது. குறிப்பாக, இன்று காலை, நகரின் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விதிகளை மீறி பட்டாசுகள் வெடித்ததால் காற்றின் தரம் மோசமாக மாறியது.

தில்லி காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, அனைத்து ஆண்டுகளுமே இது போன்ற பிரச்னை ஏற்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாராணையில், "தேசிய தலைநகரில் பரிந்துரைக்கப்பட்ட காற்றின் தரக் குறியீடு குறித்து வரையறுக்கப்பட வேண்டும். காற்றின் திசையின் அடிப்படையில் காற்றின் தர ஆணையம் அறிவியல் ஆய்வு நடத்த வேண்டும். இந்த தற்காலிக நடவடிக்கைகள் உதவாது. நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? அது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? என்பதை ஏழு நாள்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நான் உடனடி நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளேன். நீண்ட கால திட்டங்களும் உள்ளன. தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங், "வேளாண் கழிவுகள் எரிக்கப்படும் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினால், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியும்" எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com