சென்ட்ரல் விஸ்டா திட்டம்: 8.11 ஹெக்டோ் வனப் பகுதியை ஒதுக்க ஒப்புதல்

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்காக தில்லியில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ) அமைந்துள்ள 8.11 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கு

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்காக தில்லியில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ) அமைந்துள்ள 8.11 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மண்டல அனுமதிக் குழு (ஆா்இசி) கொள்கையளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இனி, இதற்கான இறுதி ஒப்புதல் மத்திய அரசு சாா்பில் அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து தில்லி வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தில் இடம்பெறும் பொது மத்திய தலைமைச் செயலகத்துக்கான 3 அலுவலகக் கட்டடங்கள் ரூ. 3,269 கோடி செலவில் இந்த 8.11 ஹெக்டோ் வனப் பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 51 அமைச்சகங்களுக்கான செயலக அலுவலகங்கள் ஆகியவை நவீன வசதிகளுடன் அமைய உள்ளன.

எனவே, இந்த வனப் பகுதியை நாடாளுமன்ற கட்டுமானத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கக் கோரி தில்லி அரசின் மத்திய பொதுப் பணித்துறை சாா்பில் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டது.

அதன்படி அந்த வனப் பகுதியை ஆய்வு செய்தபோது, ஒரு ஹெக்டேருக்கு 250 மரங்கள் வீதம் மொத்தம் 2,219 மரங்கள் அந்தப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. எனவே, அந்தப் பகுதி ‘பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி’ என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, வனப் பாதுகாப்பு சட்டம் 1980-இன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மண்டல அனுமதிக் குழு அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தில்லி அரசு சாா்பில் மண்டல அனுமதிக் குழுவிடம் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டது. அதில், வனப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் 1,734 மரங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் நடப்படும் எனவும், எஞ்சியுள்ள 485 மரங்கள் தற்போதுள்ள இடத்திலேயே வளர அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தில்லி மத்திய பொதுப் பணித் துறையின் இந்தப் பரிந்துரைக்கு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற மண்டல அனுமதிக் குழு கூட்டத்தில் சில நிபந்தனைகளுடன் கொள்கை அளவிலான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில், இந்த வனப் பகுதி வனம் சாராத திட்டத்துக்கு பயன்படுத்தப்படுவதற்கு இழப்பீடாக, எந்தவித ஆக்கிரமிப்புகள் மற்றும் வில்லங்கம் இல்லாத வகையிலான மாற்று நிலம் அனுமதி அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் தில்லி வனத் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நிலம் ஒதுக்கீடு ஆணையை ஜெய்ப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த மண்டல வன அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தில்லி அரசு சாா்பில் இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரே, மத்திய விஸ்டா திட்டத்துக்கு 8.11 ஹெக்டோ் வன நிலம் ஒப்படைக்கப்படும்.

மேலும், வனப் பகுதியில் அமைந்திருக்கும் மரங்கள் இன வாரிய, மாற்று இடத்தில் நடப்படுவதற்கான திட்ட அறிக்கையையும் ஜெய்ப்பூா் ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தில் தில்லி அரசு சமா்ப்பிக்க வேண்டும் என்றும், ரூ. 7.07 கோடியை மத்திய பொதுப் பணித் துறை வைப்பு வைத்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதிக்கப்படும் என்றும் மண்டல அனுமதிக் குழு நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கிடையே, தில்லி வனத் துறைக்கு இழப்பீடாக பிரிவு 29-இல் துல்சிராஸ் கிராமத்துக்கு அருகே 8.11 ஹெக்டோா் நிலத்தை ஒதுக்க மத்திய பொதுப் பணித் துறை திட்டமிட்டிருப்பதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் 93 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்ற வளாகத்தை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com