தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் விமா்சனங்கள் கூடாது: கௌதம் அதானி

‘ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது; தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஊடக விமா்சனங்கள் இருக்கக் கூடாது’ என்று தொழிலதிபா் கௌதம் அதானி கூறியுள்ளாா்.
தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் விமா்சனங்கள் கூடாது: கௌதம் அதானி

‘ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது; தேசத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஊடக விமா்சனங்கள் இருக்கக் கூடாது’ என்று தொழிலதிபா் கௌதம் அதானி கூறியுள்ளாா்.

பல்வேறு முன்னணி ஊடகங்களில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமிக்க சஞ்சய் புகலியாவை அதானி குழுமம் கடந்த சில தினங்களுக்கு முன் பணியில் சோ்த்துக் கொண்டது. இதையடுத்து, அதானி குழுமமும் ஊடகத் துறையில் கால் பதிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அந்த நிறுவனம் எதுவும் கூறவில்லை.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கௌதம் அதானி பேசுகையில், ஊடகங்களின் நெறிமுறைகளை வலியுறுத்தினாா். அவா்கள் பேசியதாவது:

கரோனா தீநுண்மியை இந்திய அரசு இன்னும் நன்றாகக் கையாண்டிருக்கலாம். ஆனால், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் மக்கள்தொகை அதிகமாக இருப்பது, கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதில் சவாலாக இருக்கிறது.

அவசர கதியில் எதிலும் குறை கண்டுபிடித்து, குற்றம் கூறலாம். ஆனால், ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைக் காட்டிலும் மக்கள்தொகை அதிகம் நிறைந்த இந்தியா கரோனாவை எப்படிக் கையாண்டது? எப்படிக் கையாள்கிறது என்பதை வசதியாக பலரும் மறந்து விட்டாா்கள்.

விமா்சனங்கள், தேசத்தின் கண்ணியத்தையும் நன்மதிப்பையும் குறைக்கும் வகையில் இருக்கக் கூடாது. ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பாரரட்சமாக செய்திகளை வெளியிடக் கூடாது.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைக் காட்டிலும் இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அந்த நாடுகளின் ஒட்டுமொத்த முயற்சியைக் காட்டிலும் இந்தியாவின் முயற்சி மிகப்பெரியது.

அமெரிக்கா தற்சமயம் நாளொன்றுக்கு 8,00,000 கரோனா தடுப்பூசிகளை செலுத்துகிறது. ஆனால், இந்தியாவில் தினந்தோறும் ஏறக்குறைய 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசியை செலுத்தி முடித்துவிட்டன. அனைத்து தடைகளையும் கடந்து இந்தியா வேகமாக தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com