கரோனா எதிரொலி: மருத்துவமனைகளிலும் இடுகாடுகளிலும் நீண்ட வரிசை

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: மருத்துவமனைகளிலும் இடுகாடுகளிலும் நீண்ட வரிசை
கரோனா எதிரொலி: மருத்துவமனைகளிலும் இடுகாடுகளிலும் நீண்ட வரிசை

லக்னௌ: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மாவட்டங்களில் 20ம், 36 மாவட்டங்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் 12-ம், மத்தியப் பிரதேசத்தில் 13 மாவட்டங்களிலும், பஞ்சாப்பில் 8 மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நிலைமை கட்டுக்குள் இல்லை. தலைநகர் ராஞ்சியில் படுக்கை வசதிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

கரோனா தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கும் முக்கிய மருந்துகளுக்கும் இந்த மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு என்றால், மறுபக்கம், லக்னௌ, ராய்ப்பூரில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் அங்கு தற்காலிக இடுகாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருக்கும் இடுகாடுகள் போதுமானவையாக இல்லாததால் இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

குஜராத்தில், உயிரிழந்த கரோனா நோயாளிகளின் உடல்களை புதைக்கவோ எரிக்கவோ போதிய இட வசதி இல்லாததால் ஒரேயிடத்தில் அதிகப்படியான உடல்களை வைத்து எரியூட்டுப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அங்கு கரோனா நோயாளிகளின் உடல்களை எரிக்கும் பணியைச் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

லக்னௌ இடுகாடுகளில் நீண்ட வரிசையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதால், தற்காலிகமாக எரிவாயு தகனமேடைகளை அமைக்க நகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

ராய்ப்பூரில் மட்டும் 35 தற்காலிக தகனமேடைகளை உருவாக்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில் 6 தகனமேடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் 12 மாவட்டங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லை. லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அதில் இந்தூர் மற்றும் போபால் முதல் இடங்களில் உள்ளன.  

கரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், பலி எண்ணிக்கை அதிகரிப்பால் அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் போதிய இடவசதி இல்லாததாலும் நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மிக மோசமான நிலையை எட்டியிருப்பதையேக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com