ஒமைக்ரான் பரவல்: அவசரமாக செய்ய வேண்டியது என்ன? தொற்றுநோயியல் துறை நிபுணர் பதில்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும், 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதையும் விரைவுபடுத்த வேண்டும் என்று தொற்றுநோயியல் துறை நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
பூஸ்டர் ஊசி, குழந்தைகளுக்கு தடுப்பூசியை விரைவுபடுத்துங்கள்: தொற்றுநோயியல் துறை நிபுணர்
பூஸ்டர் ஊசி, குழந்தைகளுக்கு தடுப்பூசியை விரைவுபடுத்துங்கள்: தொற்றுநோயியல் துறை நிபுணர்


வேலூர்: நாட்டில், பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும், 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதையும் மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் டி. ஜாக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில்  ஓய்வு பெற்ற தொற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியரான டாக்டர் டி. ஜாக்கப் ஜான் கூறுகையில், புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ், முந்தைய வைரஸ்களைவிடவும், குழந்தைகளை அதிகம் தாக்கும் அபாயமிருப்பதாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்..

புதிய கரோனா வைரஸ் பற்றி இதுவரை நாம் அறிந்துகொண்டிருப்பது என்ன?

ஒமைக்ரான் வைரஸின் கூர்முனை புரதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மனிதனின் சுவாசக் குழாயில் மிகக் கச்சிதமாக பொருந்திக் கொள்கிறது. எனவே, ஒரு மனிதனின் சுவாசக் குழாயில் அதிகமான வைரஸ்கள் இருக்கும். இதனால், இது அதிகமானோருக்குப் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுவரை கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்களைக் காட்டிலும் இது அதிவேகமாகப் பரவும் அபாயம் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் பரவினால் ஏற்படும் பாதிப்பு, தனிநபர்களின் நோய்எதிர்ப்பாற்றலைப் பொருத்தது.

இதனை, ஆய்வுகளுக்குப் பிறகுதான் உறுதி செய்ய முடியும். ஆனால், நாம் தற்போது, டெல்டா வைரஸைக் காட்டிலும், ஒமைக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுகிறோம். ஒமைக்ரான் வைரஸால், இதுவரை ஒரே ஒரு உயிர்பலிதான் ஏற்பட்டுள்ளது. இதற்கு, நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருப்பது காரணமா, வைரஸின் தீவிரம் குறைவாக இருப்பதுதான் காணமா என்பதை ஆய்வுகளுக்குப் பிறகே உறுதி செய்ய முடியும்.

ஒமைக்ரான் காரணமாக நாட்டில் மூன்றாவது அலை எழக்கூடுமா?

ஒமைக்ரான் காரணமாக, நாட்டில் மூன்றாவது அலை எழக்கூடுமா என்பதை கணிக்க இயலாது. 

ஆனால், நாடு முழுவதும் தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும்.  ஆனால் அது பேரலையாக உருவாகாது. நோய் தொற்று அதிகரிப்பதை (அதிக பதிப்பில்லாமல்) அலை என்று அழைப்பதில்லை.

ஆனால், நிபுணர்கள் பலரும் புதிய அலை உருவாகும் என்றே எதிர்பார்க்கிறார்கள். கெடுவிளைவாக, மத்திய அரசு, பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது போலவே நடந்து கொள்கிறது. தொய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.

ஏற்கனவே மூன்றாவது அலை பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எழவில்லை. ஆனால் தற்போது மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இப்போது யாரும் அது பற்றி கவலைப்படவில்லை. தற்போதைய நிலையை மத்திய அரசு எளிதாகக் கையாளக்கூடாது.
 

பூஸ்டர் தடுப்பூசி அவசியமா?

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி மிகச் சிறந்த எதிர்ப்பாற்றலை நிச்சயம் கொடுக்கும். தடுப்பூசி எதிர்ப்பாற்றலை அப்படியே ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் வைரஸால் தாண்டிச் சென்றுவிட முடியாது.

எனினும், இந்த ஒமைக்ரான், வூஹானில் கண்டறியப்பட்ட வைரஸைக் காட்டிலும் பன்மடங்கு உருமாற்றம் அடைந்தது.

எனவே, கரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது சிறந்தது. நிச்சயம் பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரானிலிந்து தப்பிக்க உதவும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

வயதான மற்றும் அதிக அபாயம் இருப்பவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மறுக்கப்பட்டால், அது பாதுகாப்பை மறுப்பதாகும். பூஸ்டருக்கு முன்பு, கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றால் அது சரியல்ல. இரண்டுமே முக்கியம். பூஸ்டர் ஊசி செலுத்துவதை தாமதிக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி?

மக்கள் தொகையின் பெரும்பகுதியினராக இருக்கும் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு தொற்று பாதித்தால் என்னவாகும்? அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமானது. முந்தைய கரோனாவைக் காட்டிலும் டெல்டா வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதித்தது.

பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, உடனடியாக, 2  - 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்திருக்கும் அறிக்கையும் உள்ளது. இதற்கு இன்னமும் ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com