புயலை கிளப்பும் அயோத்தி ராமர் கோயில் நில ஊழல் விவகாரம்; தெளிவாக விளக்கிய பிரியங்கா காந்தி

அயோத்தி ராமர் கோயில் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், முதல்முறை 8 கோடி ரூபாய்க்கும் இரண்டாம் முறை 18.5 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பல ஆண்டுகளாக, புயலை கிளப்பிவந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரம் கடந்த 2019 ஆண்டு முடிவுக்கு வந்தது. சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லாவுக்கே (ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு, ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை அமைத்தது. சர்ச்சை சற்று ஓய்ந்ததிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில் நில ஊழல் குற்றச்சாட்டு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. ஊழல் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் இன்று வழங்கினார். அதில், அயோத்தி ராமர் கோயில் அருகே உள்ள 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், இரண்டு முறை விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளைக்கு முதல்முறை, 8 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது முறை 18.5 கோடி ரூபாய்க்கும் நிலம் விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய பிரியங்கா காந்தி, "இரண்டு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலத்தை முதலில் 8 கோடி ரூபாய்க்கும் இரண்டாவது முறை 18.5 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. நிலம் இரண்டு துண்டு நிலமாக விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 26.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிலத்தில் ஏற்கனவே பிரச்சனை இருந்திருக்கிறது. இதுகுறித்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே, நிலத்தை யாராலும் விற்க முடியாத நிலை இருந்துள்ளது. அந்த நிலம், முதலில் ஒரு தனிநபருக்கு 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஐந்தே நிமிடத்தில், அதே நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு அவர் விற்றுள்ளார். இது ஊழல் இல்லை என்றால், வேறு எது ஊழல்? நில பேரங்களில் சாட்சியங்கள் யார்? ஒருவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினராகவும், ராமர் கோவில் கமிட்டியில் அறங்காவலராகவும் உள்ளார். மற்றொருவர் அயோத்தியின் மேயர்.

இந்த ஊழல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு, ஜிலா பரிஷத் அளவிலான அலுவலர் ஒருவரை நியமித்துள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டுவது உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுவதால், இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கீழ் வர வேண்டும்" என்றார். 

பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களின் உறவினர்கள் கோயிலுக்கு அருகே சட்டவிரோதமான முறையில் நிலம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com