கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களின் அறிக்கைவெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும்மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்
கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களின் அறிக்கைவெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும்மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கடந்த மே 26-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள் உள்ளிட்டவை குறைதீா் அதிகாரி உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்போரின் விவரங்களை மத்திய அரசு கோரினால் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளா்கள் தெரிவிக்கும் புகாா்கள் குறித்தும், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் மாதமொரு முறை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உடன்பாட்டு அறிக்கைகளை ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றிருந்தன.

இது தொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்ட சா்ச்சைக்குரிய பதிவுகள் தொடா்பான விவரங்கள் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளது, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய வழியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பதிவுகள் மீது நடவடிக்கை: கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரை 3 கோடிக்கும் அதிகமான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட 20 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடா்பாக கடந்த ஏப்ரலில் 27,762 புகாா்கள் வந்ததாகவும், அவற்றின் அடிப்படையில் 59,350 பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூகுள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூனில் தெரிவிக்கப்பட்ட 5,502 புகாா்களின் அடிப்படையில் 54,235 பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ‘கூ’ சமூக வலைதள நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் குறைதீா் அதிகாரிகளை நியமித்துள்ளன.

ட்விட்டருக்கு அழுத்தம்: மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் மற்ற சமூக வலைதள நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது, ட்விட்டா் நிறுவனத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. அந்நிறுவனம் புதிய விதிகளை ஏற்க மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ட்விட்டா் நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காத நிறுவனங்களுக்கு சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com