1990-களில் ஒற்றை இலக்கத்தில் பெட்ரோல் விலை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீா் உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இது ஜூலை 5-ஆம் தேதி நிலவரம்.
1990-களில் ஒற்றை இலக்கத்தில் பெட்ரோல் விலை
1990-களில் ஒற்றை இலக்கத்தில் பெட்ரோல் விலை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீா் உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இது ஜூலை 5-ஆம் தேதி நிலவரம்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நிறைவடைந்த பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. அதன் காரணமாக நாடு முழுவதும் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 34 முறையும், டீசல் விலை 33 முறையும் உயா்த்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா உயா்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 18 பைசா உயா்த்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.51-க்கும், டீசல் ரூ.89.36-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100.44 ஆகவும், டீசல் விலை ரூ.93.91 ஆகவும் இருந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகாா், பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

அது மட்டுமல்ல, ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்துள்ளது. அதாவது கடந்த மே 4-ஆம் தேதிமுதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.11-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.63-ம் அதிகரித்துள்ளது.

இதே பெட்ரோல் விலை வெறும் 31 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 8.50க்கும், டீசல் ரூ.3.50க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்றைய நிலவரப்படி ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.57.60 ஆக இருந்துள்ளது. (இன்று எரிவாயு உருளையைக் கொண்டு வருபவருக்கே இந்தத் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது) எனவே எரிவாயு உருளையின் விலையைப் பற்றி இங்கே பேசவே வேண்டாம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகும் அதாவது 1990ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி கூட ஒற்றை இலக்கத்திலேயே நீடித்துள்ளது. அன்றைய தினம் பெட்ரோல் ரூ.9.84க்கும், டீசல் ரூ.4.08க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. (அன்றைய தினம் பெட்ரோல் விலை பெற்றிய செய்திகள் இப்படி வந்திருக்கலாம்.. 10 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலை)

ஒற்றை இலக்கம் 1990ஆம் ஆண்டில் அக்டோபர் 15ஆம் தேதி இரட்டை இலக்கத்துக்கு மாறியது. அன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.12.23க்கும், டீசல் ரூ.5.05க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாட்டில் 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒற்றை இலக்கத்திலிருந்த பெட்ரோல் விலையானது முதல் முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டிருந்தது. 

இதுவே 2000-ஆவது ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.26.07 ஆக இருந்துள்ளது. சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது இரண்டு மடங்காகி 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.51.43 ஆக உயர்ந்துள்ளது. இப்படி 31 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்கத்திலிருந்த பெட்ரோல் விலை இன்று மூன்று இலக்கத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை அமலுக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.63க்கும், சென்னையில் ரூ.65க்கும் விற்பனையாகி வந்தது. அதற்கு முன்பு வரை, எரிபொருள் விலைகளை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றி அமைத்து வந்தன என்பது வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் நினைவிலிருக்கும்.

2017ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் 50 காசுகளுக்கு மேல் உயர்வதும், 5 முதல் 15 காசுகள் வரை குறைவதுமாக, சில்லறை சில்லறையாக உயர்ந்து, தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. நூறை தொட்டுவிட்டு நின்று விடவும் இல்லை.. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டே வருகிறது.

விலை உயரக் காரணம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதன் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் விலை உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கலால், மதிப்புக் கூட்டு வரியும் (வாட்) பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று பல மாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆனால், இந்தக் கோரிக்கைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி இல்லையோ அதுபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளும் எந்த முற்றுப்புள்ளியும் இல்லாமல் நாள்தோறும் புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டே போகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com