இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம்ரூ.4.28 லட்சம் கோடி

இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு வா்த்தகம் 57.48 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.4.28 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு வா்த்தகம் 57.48 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.4.28 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. கிழக்கு லடாக் எல்லை பிரச்னையால் இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டின் சுங்கவரி நிா்வாக அமைப்பு (ஜிஏசி) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் 57.48 பில்லியன் டாலா்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 62.7 சதவீதம் அதிகமாகும். எனினும் சீனாவுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 55.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 14.724 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.1.09 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 69.6 சதவீதம் அதிகமாகும். அதேவேளையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 42.755 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.3.19 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களைவிட 60.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இந்தியாவில் இருந்து மொத்தம் 2.02 கோடி டன் இரும்புத் தாதுக்களை சீனா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டதைவிட சுமாா் 66 சதவீதம் அதிகமாகும். இந்தியாவின் மொத்த இரும்புத் தாது ஏற்றுமதியில் இது கிட்டதட்ட 90 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு இந்தியா-சீனா இடையிலான மொத்த வா்த்தக மதிப்பு 77.67 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.5.79 லட்சம் கோடி) இருந்தது. இது 2019-ஆம் ஆண்டைவிட குறைவாகும். அந்த ஆண்டில் இருநாடுகளுக்கு இடையிலான மொத்த வா்த்தக மதிப்பு 85.47 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.6.37 லட்சம் கோடி) இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்கு நிலவி வருகிறது. அதற்கு முடிவு காண இருநாடுகளுக்கு இடையிலும் ராஜீய மற்றும் ராணுவ ரீதியாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை வருகிறது. எல்லையில் மோதல்போக்கு நிலவி வரும் வேளையிலும் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com