கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

எடியூரப்பா தமது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு
கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு


பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: புதிய அரசு எப்படி இருக்கும்? கர்நாடக முதல்வர் பொம்மை விளக்கம்

பாஜக மேலிடத்தின் விருப்பத்திற்கு இணங்க, 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியை எடியூரப்பா திங்கள்கிழமை (ஜூலை 26) ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தேசியத் தலைமை ஈடுபடத் தொடங்கியது. பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி. கிஷன்ரெட்டி ஆகியோரை பாஜகவின் மத்திய நாடாளுமன்றக் குழு நியமித்துள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் அறிவித்தார்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு:

இதைதொடர்ந்து, மேலிடப் பொறுப்பாளரான அருண் சிங் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். அதேபோல, மேலிடப் பார்வையாளர்களான தர்மேந்திர பிரதான், ஜி. கிஷன்ரெட்டி ஆகியோரும் பெங்களூருக்கு வருகை தந்தனர்.

பெங்களூருக்கு வந்த அருண் சிங் நேராக எடியூரப்பாவின் வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினார். அதன்பிறகு குமாரகுருபா விருந்தினர் இல்லத்திற்கு வந்த அருண் சிங்கை பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் சந்தித்தார். 

படிக்க: நாளை கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: பதவியேற்க ஆளுநர் அழைப்பு

குமாரகுருபா விருந்தினர் மாளிகையில் இருந்த மேலிடப்பொறுப்பாளர் அருண்சிங், மேலிடப் பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், ஜி. கிஷன்ரெட்டி ஆகியோரை துணை முதல்வர்களாக இருந்த அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, அமைச்சர்களாக இருந்த ஆர். அசோக், கே. சுதாகர், பிரவு சௌஹான், ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். 

சட்டப்பேரவைக் குழுக் கூட்டம்:

அதன்பிறகு பெங்களூரு, கேப்பிட்டல் ஓட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பாஜகவின் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், மேலிடப் பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இருந்தனர். 

இக்கூட்டத்தில், பாஜகவின் சட்டப்பேரவைக் குழு புதிய தலைவராக பசவராஜ் பொம்மையின் பெயரை எடியூரப்பா முன்மொழிய, அதை கோவிந்த்கார் ஜோள் வழிமொழிந்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜக சட்டப்பேரவைக் குழு புதிய தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். 

எடியூரப்பா சார்ந்துள்ள லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. 

இதனையடுத்து பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.  

பசவராஜ் பொம்மை என்பவர் யார்?:

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை. இவர்  2008-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதற்கு முன்பு ஜனதா தள கட்சியில் செயல்பட்டார்.

61 வயதான அவர், 2019-ம் ஆண்டு முதல் கர்நாடக அமைச்சரவயில் பதவி வகித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com