
மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கிய நாள் முதலே பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக காகிதத்தை கிழித்தெறித்தனர்.
இதையும் படிக்க | பள்ளிகள் திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், நேற்று மாலை எதிர்க்கட்சி எம்.பிக்களின் செயலுக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், சபையின் சில உறுப்பினர்கள் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரான சம்பவங்களை தொடர்ந்து செய்கிறார்கள்.
சபையின் மாண்பை குறைக்கும் விதமாகவும் களங்கப்படுத்தும் விதமாகவும் தொடர்ந்து நடந்துகொண்டால் உறுப்பினர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் ஓம் பிர்லா தெரிவித்தார்.