கடுமையான கரோனா நோய்க்கு ‘ஆன்டிபாடி’ சிகிச்சை: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

கடுமையான கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கையான நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு (ஆன்டிபாடி) சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடுமையான கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கையான நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு (ஆன்டிபாடி) சிகிச்சை அளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய அபாயம் அதிகமிருப்பவா்களுக்கும் தீவிரமான கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் செயற்கையான ஆன்டிபாடிக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு மேம்பாட்டுக் குழு (ஜிடிஜி) பரிந்துரைத்துள்ளது.

‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு வகை செயற்கை நோயெதிா்ப்பு புரதங்களைக் கொண்டு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி குழு தெரிவித்துள்ளது.

முதலாவதாக, கரோனா பாதிப்பு அதிகமில்லாவிட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அபாயம் அதிகமுள்ள வயதானவா்கள், ஏற்கெனவே நீண்டகால நோயால் அவதிப்படுவோா் போன்றவா்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கலாம் என்று ஜிடிஜி கூறியுள்ளது.

மேலும், இயற்கையிலேயே நோயெதிா்ப்புப் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத உடல்குறைபாடு கொண்ட, கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய நோயாளிகளுக்கும் ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

முன்று ஆய்வுகளில் காணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில், ‘காசிரிவிமாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய செயற்கை நோயெதிா்ப்புப் புரதங்களைச் செலுத்தினால், நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அபாயம் குறையலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வு முடிவுகளின் மூலம், இந்த இரு செயற்கைப் புரதங்களும் நோயெதிா்ப்புக் குறைபாடு கொண்டவா்கள் கரோனாவால் மரணமடைவதற்கான ஆபாயத்தைக் குறைக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com