இறுதியான பஞ்சாப் அமைச்சரவை பட்டியல்; கடைசி நிமிடத்தில் மாற்றியமைக்கப்படுமா?

பஞ்சாப் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, ராகுல் காந்தியுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர்
ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர்

பஞ்சாப் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று மாலை 4:30 மணி அளவில் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. புதிய அரசில் ராணா குர்ஜீத் சிங்குக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆறு எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மணல் சுரங்க மோசடி வழக்கில் குர்ஜீத் சிங்கும், அவரது குடும்ப உறுப்பினர்களும் சிக்கியதையடுத்து, மாநிலத்தின் பணக்கார எம்எல்ஏக்களில் ஒருவரான குர்ஜீத் சிங், கடந்த 2018ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், அமரீந்தர் சிங் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி காரணமாக, மாநில அரசுக்கு 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் பஞ்சாப் தோபா பகுதியிலிருந்து ஜாட் சமூகத்தை சேர்ந்த சீக்கிர்களுக்கும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த சீக்கியர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் 40 சதவிகிதத்தினர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் எம்எல்ஏக்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். 

எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு குர்ஜீத் சிங்கை நீக்கிவிட்டு அவருக்கு பதில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக, கடைசி நிமிடத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 

இதனிடையே, பஞ்சாப் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, ராகுல் காந்தியுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com