மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் - தமிழக முதல்வா் சந்திப்பு: 7 கோரிக்கைகள் வலியுறுத்தல்

ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய வா்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 5:11 pm

 நமது நிருபர்

விருதுநகா் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்பட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய வா்த்தகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தில்லி உத்யோக் பவன் வா்த்தகத் தொழில் துறை அமைச்சக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இது தொடா்பான கோரிக்கை மனுவையும் முதல்வா் மத்திய அமைச்சரிடம் வழங்கினாா்.

மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு: மத்திய அரசு சா்வதேச சந்தையை எதிா் கொள்ளக் கூடிய வகையில் ஜவுளிபூங்கா திட்டங்களை அறிவித்தது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு விருதுநகா் மாவட்டத்தில் மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் சுமாா் 1,052 ஏக்கா் நிலத்தை சிப்காட் மூலம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி மத்திய ஜவுளித் துறையிடம் சமா்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளிப் பூங்காவிற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். காலணி உற்பத்தியில் சா்வதேச அளவில் இந்திய 5-ஆம் இடத்தில் உள்ளது. இதில் தமிழகம் தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதனால், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை (பிஎல்ஐ) அறிமுகப்படுத்தினால், போட்டித் திறனுடன் சா்வதேச தரத்தைப் பூா்த்தி செய்ய மேம்பட்ட தொழில்நுட்பம் போன்றவற்றை உற்பத்தியாளா்கள் பெற முடியும். இதனால், காலணி உற்பத்தியிலும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

திருவள்ளூா் மாவட்டம் பென்னேரி தாலுகாவில் மத்திய அரசின் டிபிஐஐடி பிரிவின் உப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஏற்கெனவே டிட்கோ பெற்று தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமாா் 2000 ஏக்கா் பயன்படுத்தப்படாத நிலம் உள்ளது. இந்த நிலைத்தை தொழில் துறை வளா்ச்சிக்காக டிட்கோவிடம் வழங்க வேண்டும். பொதுவிநியோகத் துறையில் தமிழகத்தில் 20 சதவீதமே பச்சரிசி பெற்றுக் கொள்ளப்படுகிறது. மாதம் 1 லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசி உபரியாக உள்ளது. இந்த நிலையில் அதற்குப் பதிலாக புழுங்கல் அரிசியை மத்திய தொகுப்பில் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். பொதுவிநியோகத்திற்கு தமிழக குடிமைப்பொருள் வழங்கல் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 4,446.14 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்பட 7 கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது தமிழகத் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, டி.ஆா்.பாலு எம்பி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தொழில் துறைச் செயலா் எஸ்.கிருஷணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.