இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஏற்கெனவே வேறு பல வழக்குகளில் திகார் சிறையில் இருந்து வரும் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத் துறையினர் இந்த மாதம் 4-ஆம் தேதி கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இது தொடர்புடைய விசாரணையை மேற்கொண்டு தொடரும் வகையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த அவரை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வாரம் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு மேல் டிடிவி தினகரன் வந்தார். இதன் பின்னர், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.