இன்று மாலை ராஜிநாமா செய்கிறார் ஈஸ்வரப்பா; சந்தேகம் எழுப்பும் காங்கிரஸ்

அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா இன்று மாலை தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இன்று மாலை ராஜிநாமா செய்கிறார் ஈஸ்வரப்பா
இன்று மாலை ராஜிநாமா செய்கிறார் ஈஸ்வரப்பா

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்ததாரர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா இன்று மாலை தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

எனினும், இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கே.பாட்டீல் மார்ச் 30-ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ஈஸ்வரப்பா, சந்தோஷ் பாட்டீல் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சந்தோஷ் பாட்டீலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், பெலகாவியில் இருந்து தன் நண்பர்களுடன் உடுப்பிக்குச் சென்றிருந்த சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் ஏப். 12-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இறப்பதற்கு முன் ஊடக நண்பர்கள் சிலருக்கு அனுப்பியிருந்த வாட்ஸ்-ஆப் தகவலில், தான் தற்கொலை செய்யப் போவதாகவும், அதற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என்றும் சந்தோஷ் பாட்டீல் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் போராட்டம்: ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த 2 நாள்களாக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை  புதன்கிழமை (ஏப்.13) சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சகோதரர் புகார்: இந்நிலையில், உடுப்பி காவல் நிலையத்தில் சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல் செவ்வாய்க்கிழமை (ஏப்.12) அளித்த புகாரில், கிராம வளர்ச்சித் திட்டத்தில் சந்தோஷ் பாட்டீல் ரூ. 4 கோடி மதிப்பிலான பணிகளைச் செய்து முடித்தார். பல இடங்களில் இருந்து கடன் பெற்று முதலீடு செய்துள்ள நிலையில், அவர் செய்த பணிகளுக்கான தொகையைத் தராமல் இழுத்தடித்தனர். தொகையை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஈஸ்வரப்பாவை சந்தோஷ் பாட்டீல் பலமுறை சந்தித்தார். ஆனால், அமைச்சரின் உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் அமைச்சர் 40 சதவீத கமிஷன் கேட்பதாகக் கூறினர். ஏற்கெனவே கடன் சுமையின் அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின்பேரில், சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீஸôர் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். 

அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரும்புத் தடுப்புகளை மீறி முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவலர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், சிவமொக்காவில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ராஜிநாமா கடிதத்தை பெங்களூரில் முதல்வர் பசவராஜ் பொம்மையை வெள்ளிக்கிழமை சந்தித்து அளிப்பேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வருவேன். நான் தவறு செய்திருந்தால், என் குலதெய்வமான செளடேஸ்வரி அம்மன் என்னை தண்டிக்கட்டும் என்றார்.

விசாரணையில் உண்மை தெரியும்
அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ராஜிநாமா அறிவிப்பு குறித்து பெங்களூரில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
ஈஸ்வரப்பா என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், விசாரணை நடப்பதற்கு வசதியாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் என்னிடம் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையில் உண்மை வெளியே வரும். ஈஸ்வரப்பாவை ராஜிநாமா செய்யுமாறு கட்சி மேலிடம் எந்த நெருக்கடியையும் அளிக்கவில்லை. தார்மிக அடிப்படையில் சொந்த விருப்பத்தின்படியே அவர் ராஜிநாமா செய்ய முடிவெடுத்திருக்கிறார் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், சந்தோஷ் பாட்டீல் யார் என்றே தெரியாது என்று கூறியவர், அமைச்சர் பதவியை ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்? தனது தவறை உணர்ந்திருப்பதால்தான் ராஜிநாமா செய்திருக்கிறார். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். அதுவரை காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com