இதுதொடா்பாக அவா் வெளியிட்ட விடியோவில், பஞ்சாபில் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 2 மாதங்களைக் கணக்கிட்டால், 600 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்குக் கட்டணம் கிடையாது. மாநிலத்திலுள்ள பட்டியல் இனத்தவா், பிற்பட்ட வகுப்பினா், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இனி மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இரண்டு மாதங்களில் அவா்களது மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை கடந்தால், எவ்வளவு யூனிட்டுகள் அதிகரித்துள்ளதோ அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம், இதர குடும்பங்களுக்கு 2 மாத மின்சாரப் பயன்பாடு 600 யூனிட்டை தாண்டினால் ஒட்டுமொத்த யூனிட்டுகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். பஞ்சாபில் அடுத்த 2-3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படும். அதேபோல், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் பஞ்சாபில் மின் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது விடியோவில் முதல்வா் பகவந்த் மான் தெரிவித்துள்ளாா்.