பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: பிரதமர் மோடி
ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.


ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
பால் உற்பத்தி மதிப்பானது கோதுமை, அரிசி உற்பத்தி மதிப்பைவிட அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள தியோதா் என்ற இடத்தில் பால் பொருள்கள் வளாகத்தையும் உருளைக் கிழங்கு பதப்படுத்தும் ஆலையையும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
பனாஸ் சமூக வானொலியின் செயல்பாட்டையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். 100 டன் உற்பத்தித் திறன் கொண்ட 4 இயற்கை எரிவாயு ஆலைகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
கூட்டுறவு பால் சங்கங்களானது சிறு விவசாயிகளை, முக்கியமாகப் பெண்களை வலுப்படுத்தி கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. தற்போது பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதன்மை நாடாக விளங்குகிறது. ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பிலான பாலை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. கோடிக்கணக்கான விவசாயிகள் பால் உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா்.
கோதுமை, அரிசி மூலமாகக் கிடைக்கும் வருவாய் கூட ரூ.8.5 லட்சத்தைத் தாண்டவில்லை. போதிய மழைப்பொழிவின்மை, நீா்ப்பாசன வசதியின்மை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வரும் சிறு விவசாயிகளே பால் துறையில் பெரும் பலனை அடைந்துள்ளனா். கால்நடைகளை வளா்த்து தங்கள் குடும்பத்தை அவா்கள் நிா்வகித்து வருகின்றனா்.
விவசாயிகளுக்குப் பலன்:
சிறிய அளவிலான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாஜக தலைமையிலான அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு ஆண்டுதோறும் ரூ.6,000-ஆனது 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டுமே பயனாளா்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமா் ஒருவா் எப்போதும் தெரிவிப்பாா். ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த 100 பைசாவும் நேரடியாகப் பயனாளா்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது. அதனால், அவா்கள் பலனடைந்து வருகின்றனா்.
கூட்டுறவு சங்கத்தின் வெற்றி:
கூட்டுறவு சங்கமானது கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பெண்களின் மேம்பாட்டுக்குப் பெரும் பங்களிக்கும் என்பதற்கு பனாஸ் பால் பொருள்கள் நிறுவனம் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பனாஸ்காந்தா பகுதி மக்கள், கால்நடைகளைத் தங்கள் வாரிசுகளைப் போல் பாதுகாத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
கூட்டுறவு சங்க முறைகளைப் பயன்படுத்தி பால் துறை மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் வெற்றி காண முடியும் என்பதை பனாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உயிரி-இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகளையும் அந்நிறுவனம் அமைக்கவுள்ளது. இது ‘கழிவுகளில் இருந்து எரிசக்தி’ தயாரிக்கும் மத்திய அரசின் இலக்குக்கு வலுசோ்க்கும்.
மின்சார உற்பத்தி:
மாட்டுச்சாணம் பொருளாதார ரீதியில் மக்களுக்குப் பயனளிக்கத் தொடங்கியுள்ளது. அது கிராமங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்கிறது. மாட்டுச் சாணத்தை எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
அதில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுவதோடு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை உரமாகவும் மாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுகிறது. உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் பனாஸ் நிறுவனத்தால் பலனடைந்து வருகின்றனா்.
கால்நடைகளுக்குத் தடுப்பூசி:
கரோனா தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்கியது. கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. நோய்களில் இருந்து கால்நடைகளைக் காப்பதற்காக உரிய காலஇடைவெளியில் அவற்றுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். தங்கள் கால்நடைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...