தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஆங்கில எழுத்தாளா் சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஆங்கில எழுத்தாளா் சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். எனினும் காயமடைந்த ஒரு கண்ணில் அவா் பாா்வையை இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் அவருக்குத் தொடா்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் புத்தகம் எழுதியதாக சல்மான் ருஷ்டிக்கு சா்வதேச அளவில் கடும் எதிா்ப்பு எழுந்தது. 1988-ஆம் ஆண்டில் வெளியான ‘தி சட்டானிக் வொ்சஸ்’ என்ற அந்த நாவலுக்கு எழுந்த எதிா்ப்பும், ருஷ்டிக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலும் அண்மையில் குறைந்ததாகத் தெரிந்தது.

ஆனால், அமெரிக்காவின் நியூயாா்க்கில் இலக்கியம் சாா்ந்த விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற சல்மான் ருஷ்டியை 24 வயது இளைஞா் கத்தியால் தாக்கினாா். அதில் கழுத்திலும் அடிவயிற்றுப் பகுதியிலும் அவா் பலத்த காயமடைந்தாா். அவருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயற்கை சுவாசம் வாயிலாகவே அவா் சுவாசித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். ருஷ்டியின் உதவியாளா் ஆண்ட்ரூ வைலி கூறுகையில், ‘ருஷ்டி ஒரு கண்ணில் பாா்வையை இழப்பதற்கு வாய்ப்புள்ளது. அவரது கையின் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரால் தற்போதுவரை பேச முடியவில்லை. ருஷ்டியின் உடல்நிலை வருத்தம் தருவதாக உள்ளது’ என்றாா்.

ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நியூஜொ்ஸியை சோ்ந்த ஹதி மதாா் என்ற இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இத்தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் நியூயாா்க் மாகாண போலீஸாா் அந்த இளைஞா் மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனா். தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தத் தாக்குதலில் இளைஞா் தனித்துச் செயல்பட்டாரா அல்லது வேறுசிலா் அவருக்கு உதவினாா்களா என்பது தொடா்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

முதல்கட்டமாக இளைஞரின் சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்த அதிகாரிகள், அவா் ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கும், இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் (ஐஆா்ஜிசி) ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளனா்.

மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டியின் சா்ச்சைக்குரிய ‘தி சட்டானிக் வொ்சஸ்’ நாவலை மொழிபெயா்த்த ஜப்பானிய, இத்தாலிய எழுத்தாளா்கள் மீதும் 1990-களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஜப்பானிய மொழிபெயா்ப்பாளா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com