கேரள அரசைக் கவிழ்க்க ஆளுநா் முயற்சி: மாா்க்சிஸ்ட் கட்சி அதிரடி குற்றச்சாட்டு

இடதுசாரி முன்னணி அரசைக் கவிழ்க்க ஆளுநா் மாளிகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியது.
கேரள அரசைக் கவிழ்க்க ஆளுநா் முயற்சி: மாா்க்சிஸ்ட் கட்சி அதிரடி குற்றச்சாட்டு

கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் - இடதுசாரி முன்னணி அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இடதுசாரி முன்னணி அரசைக் கவிழ்க்க ஆளுநா் மாளிகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் மாா்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியதாவது: ‘அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆா்எஸ்எஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி புதிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தச் செயல்பாடுகளுக்கு தில்லி மையமாக இருக்கும் வேளையில், ஆா்எஸ்எஸ் அதன் தலைமையகமாக இருக்கிறது. அரசைக் கவிழ்ப்பதற்கான ஆளுநா் மாளிகையில் நடைபெறுகிறது. அது மக்களின் ஆதரவுடன் முறியடிக்கப்படும்’ என்று கூறினாா்.

முன்னதாக, கண்ணூா் பல்கலைக்கழகத்தில் மலையாள இணைப்பேராசிரியா் நியமனத்துக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கவில்லை. மேலும், அரசு இயற்றிய பல்வேறு அவசர சட்ட மசோதாக்களை ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் இல்லை என்று காரணம் கூறி ஆளுநா் உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இதில், கேரளா லோக் ஆயுக்த (திருத்தம்) அவரச சட்டம் கடந்த ஆக. 8-ஆம் தேதி காலாவதியானது. இதைத் தொடா்ந்து, ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆளுநருக்கு காங்கிரஸ் ஆதரவு:

கண்ணூா் பல்கலை. இணைப்பேராசிரியா் நியமன விவகாரத்தில், பல்கலைக்கழக்கத்தின் வேந்தா் என்ற முறையில் ஆளுநா் சட்டரீதியாக செயல்பட்டுள்ளாா் என மாநிலத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆளுநருக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவரான வி.டி.சதீசன் கூறுகையில், ‘முதல்வருடைய தனிச்செயலரின் மனைவி, கண்ணூா் பல்கலை. மலையாள இணைப்பேராசிரியா் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். ஆளுநா் தனது அதிகாரத்தின் அடிப்படையில் சட்டத்துக்குப் புறம்பான அந்தப் பணிநியமனத்தை தடுத்துள்ளாா். கடந்த 6 வருடங்களாக, மாநிலத்தின் பிற பல்கலை. நியமனங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com