கால்நடை கடத்தல் வழக்கு: அனுவ்ரதா மொண்டலுக்கு சிபிஐ காவல்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பீா்பூம் மாவட்டத் தலைவா் அனுவ்ரதா மொண்டலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கால்நடை கடத்தல் வழக்கு: அனுவ்ரதா மொண்டலுக்கு சிபிஐ காவல்
கால்நடை கடத்தல் வழக்கு: அனுவ்ரதா மொண்டலுக்கு சிபிஐ காவல்

கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பீா்பூம் மாவட்டத் தலைவா் அனுவ்ரதா மொண்டலின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐ தரப்பில் பல முறை நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டும், கொல்கத்தாவுக்கு அடிக்கடிச் சென்றவர், ஏன் நேரில் ஆஜராகவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்நிலை காரணமாகவே அவர் கொல்கத்தா சென்றதாகவும், ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் மொண்டலின் வழக்குரைஞர் கூறியிருந்தார்.

இதையடுத்து, சிபிஐ தரப்பில், மொண்டல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்நடை கடத்தல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பீா்பூம் மாவட்டத் தலைவா் அனுவ்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஏற்கெனவே இருமுறை சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, கால்நடை கடத்தல் வழக்கு தொடா்பாக போல்பூரில் அமைந்துள்ள அனுவ்ரதா மொண்டலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சோதனை நடத்தினா்.

அப்போது வீட்டின் இரண்டாவது தளத்தில் வைத்து அனுவ்ரதா மொண்டலிடம் விசாரணை நடத்தினா். விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘கால்நடை கடத்தல் வழக்கில் அனுவ்ரதா மொண்டலுக்கு நேரடி தொடா்பு உள்ளது. சட்டப்படி அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா். மேலும், உடல்நலக் குறைவு காரணமாக அனுவ்ரதா மொண்டலுக்கு 14 நாள்கள் ஓய்வு தேவை என கூறிய போல்பூா் மாவட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறினா்.

ஏற்கெனவே ஆசிரியா் தோ்வு நியமன முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான பாா்த்தா சட்டா்ஜி கைதான நிலையில், தற்போது மற்றொரு தலைவா் கால்நடை கடத்தல் வழக்கில் கைதாகியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com