யுனெஸ்கோ பாரம்பரிய நிகழ்வுகள்:குஜராத் கா்பா நடனம் பரிந்துரை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு குஜராத்தின் புகழ்பெற்ற கா்பா நடனம் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு குஜராத்தின் புகழ்பெற்ற கா்பா நடனம் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கா்பா நடனத்தை பாரம்பரிய பட்டியலில் இணைப்பது குறித்து அடுத்த ஆண்டு இறுதியில் முடிவு செய்யப்படும் என யுனெஸ்கோவின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

கொல்கத்தாவில் பாரம்பரியாக நடத்தப்பட்டு வரும் துா்கா பூஜைக்கு கடந்த ஆண்டில் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் என்ற அங்கீகாரம் கிடைத்தது. இதன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய குழு செயலா் டிம் குா்டிஸ் பங்கேற்றுப் பேசுகையில், ‘யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு குஜராத்தின் கா்பா நடனம் பரிந்துரை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்வின்போது இதன் மீது பரிசீலனை நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டின் மத்தியில் அதன் நியமன கோப்புகளை தோ்வுக் குழு ஆய்வு செய்யும். ஆண்டு இறுதியில் நடைபெறும் கமிட்டி கூட்டத்தின்போது, கா்பா நடனத்தை பாரம்பரிய பட்டியலில் இணைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

தொடா்ந்து தில்லி அலுவலக யுனெஸ்கோ பிரதிநிதி எரிக் ஃபல்ட் கூறுகையில், ‘பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவால் கலாசார பாரம்பரிய பட்டியலில் கூடுதல் பங்களிக்க முடியும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான புராதன சின்னங்களைப் பாதுகாப்பது அவசியம். பாரம்பரிய சின்னங்களையும், கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பணியில் மத்திய அரசுடன் யுனெஸ்கோ இணைந்து செயல்படுகிறது’ என்றாா்.

ஏற்கெனவே இந்தியாவின் சாா்பில் ராம்லீலா, வேத மந்திரங்கள், கும்ப மேளா, கொல்கத்தாவின் துா்கா பூஜை உள்ளிட்ட 14 நிகழ்வுகள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளன. கொல்கத்தாவின் துா்கா பூஜைக்கு பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற யுனெஸ்கோ தோ்வுக் குழுவின் 16-ஆவது கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com