நிதிஷ் குமாரைப் போல உணர்வற்ற ஒருவரை நான் பார்த்ததில்லை: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் கள்ளச்சாராய விவகாரத்திற்கு மத்தியில் உங்களை (நிதிஷ் குமாரை) முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். 
நிதிஷ் குமாரைப் போல உணர்வற்ற ஒருவரை நான் பார்த்ததில்லை: பிரசாந்த் கிஷோர்


பாட்னா: பிகாரில் கள்ளச்சாராய விவகாரத்திற்கு மத்தியில் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கியதற்காக வருந்துகிறேன், அவரைப் போல உணர்வற்ற ஒருவரை நான் பார்த்ததில்லை என்று பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். 

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணியின் மூலம் மீண்டும் பிகார் முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில், அவரது முன்னாள் நண்பரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் அவரை விமர்சித்து வருகிறார்.

பிகாரில் கள்ளச்சாரயம் குடித்து 53 பேர் இறந்துள்ளனர், இதனால் நிதிஷ்குமார் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ‘போலி மது அருந்துபவர்கள் சாவார்கள்’ என்ற முதல்வர் நிதீஷ் குமார் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், நிதிஷ் குமாரின் அழிவு தவிர்க்க முடியாதது என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சனிக்கிழமை அவர் தனது பாதயாத்திரையை ஷிவ்ஹரில் தொடங்கினார், அப்போது அவர் கூறியதாவது: “பிகார் முதல்வர் நிதிஷ் குமாரைப் போல உணர்வற்ற ஒரு நபரை நான் பார்த்ததில்லை. 2014-15 இல் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்குவதற்காக அவருக்கு நான் உதவினேன். ஆனால், தற்போது அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.

பிரதமராக வாஜ்பாய் இருந்தகாலத்தில் மத்திய அரசின் ரயில்வே அமைச்சராக நிதிஷ் குமார் இருந்த போது ரயில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்துக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அப்போதைய நிதிஷ் குமாருக்கும், தற்போதைய நிதிஷ் குமாருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 

மேலும், கள்ளச்சாராயம் மரணங்களை பார்த்து சிரிக்கிறார். கள்ளச்சாராயத்தை யார் குடித்தாலும் சாவார்கள் என்று கூறுகிறார். அவரது பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது.  “இந்த திமிர் பிடித்த மனிதனின் அழிவு தவிர்க்க முடியாதது. உணர்ச்சியற்ற முறையில் அவர் பேசுகிறார்.

பிகாரில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பியபோதும், நிதீஷ்குமார் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுமட்டுமின்றி, சாப்ராவில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்களுக்கு அவர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என கிஷோர் விமர்சித்தார்.

“பிகாரில், எல்லா இடங்களிலும் கள்ளச்சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது, மேலும் பிகார் போன்ற ஒரு ஏழை மாநிலம் ஒரு ஆண்டு முழுவதும் மதுவிலக்கு காரணமாக கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிகளை இழக்கிறது. பிகாரில் மதுவிலக்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மதுவிலக்கு காரணமாக ஏற்படும் நஷ்டத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஈடு செய்து வருகின்றனர். டீசல் மீது லிட்டருக்கு ரூ,9-ம், பெட்ரோலுக்கு ரூ.13-ம் வரி விதிக்கப்படுகிறது” என்றார்.

சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் பேசும் போது,  பிகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. "கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது. கள்ளச்சாராயம் அருந்த வேண்டாம், அது மரணத்திற்கு வழிவகுக்கும். கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது” என்று நிதிஷ் குமார் கூறினார். அப்படியிருந்தும் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் இறக்கிறார் என்றால் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com