ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு ராஜீவ் காந்தி குறித்துப் பேசும் மத்தியப் பிரதேச முதல்வர்

சீனா போருக்குத் தயாராகி வருவதாகவும், மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்த ராகுல் காந்தியை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தாக்கிப் பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு ராஜீவ் காந்தி குறித்துப் பேசும் மத்தியப் பிரதேச முதல்வர்

சீனா போருக்குத் தயாராகி வருவதாகவும், மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்த ராகுல் காந்தியை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தாக்கிப் பேசியுள்ளார்.


காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் நேற்றைய (டிசம்பர் 16) விமர்சனத்துக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. பாஜகவைச் சேர்ந்த பலரும் ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியினை தாக்கிப் பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது: ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ( 1984 மற்றும் 1989 ஆண்டுகளில்) சிறிய நாடுகள் கூட இந்தியாவை அச்சுறுத்தின. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வலிமையான இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பலத்தை குறைத்து மதிப்பிடும்படி பேசாதீர்கள். தற்போது இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது. இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்துக்கு சரியான பதிலடியினை ஒவ்வொரு முறையும் கொடுத்து வருகின்றனர். அதனால் இந்திய ராணுவத்தை அவமதிக்காதீர்கள். இது போன்று பேசுவதற்கு  முன்பு 1962 ஆம் ஆண்டு சீனாவுடனானப் போரில் என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ராகுல் காந்தி பேச வேண்டும் என்றார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது முறையல்ல. நாட்டுக்கு அவர் செய்துள்ள பங்களிப்புக்காக ராஜீவ் காந்தி மேன்மையாக கருதப்படுவார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவம் எப்படி துணிச்சலுடன் செயல்பட்டது என்ற வரலாற்றை சௌகான் கண்டிப்பாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். சௌகான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மட்டுமல்லாமல் இந்திய ராணுவத்தையும் அவமதித்துள்ளார், அதற்காக அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com