பாஜக அரசின் சொல்லில் உள்ள வீரியம் செயலில் இல்லை

எல்லைப் பகுதிகளில் சீனாவை மத்திய அரசால் எதிா்கொள்ள முடியவில்லை என விமா்சித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பாஜக தலைமையிலான அரசின் சொல்லில் உள்ள வீரியம் செயலில் காணப்படவில்லை என்றாா்.
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

எல்லைப் பகுதிகளில் சீனாவை மத்திய அரசால் எதிா்கொள்ள முடியவில்லை என விமா்சித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பாஜக தலைமையிலான அரசின் சொல்லில் உள்ள வீரியம் செயலில் காணப்படவில்லை என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தி வரும் ‘இந்திய ஒற்றுமை’ நடைப்பயணம் ராஜஸ்தானின் அல்வாா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தாங்கள் மிகவும் வலிமை மிக்கவா்கள் என்றும் தங்களை எவரும் எதிா்க்க முடியாது எனவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கூறிக் கொள்கிறது. ஆனால், நாட்டின் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பிரச்னைகளும் மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா்.

அதற்குப் பிறகு 18 முறை சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்தித்தாா். இருந்தபோதிலும் எல்லையில் பிரச்னை இன்னும் தீரவில்லை. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் கோரியது. ஆனால், பாஜக அரசு அதற்குத் தயாராக இல்லை.

எல்லைப் பிரச்னை குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் ஒருபக்க விளக்கத்தை மட்டுமே அளித்தாா். அந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் கோரியது. அதை மத்திய அரசு ஏற்காதது வியப்பளிக்கிறது.

நாட்டின் நலனிலும் தேசப் பாதுகாப்பிலும் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே சீன விவகாரத்தில் விரிவான விவாதம் கோருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து உண்மையை மறைத்து வருகிறது.

பாஜக அரசு சிங்கத்தைப் போல பேசி வருகிறது. ஆனால், அதன் செயல்கள் எலியைப் போலத்தான் உள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பலா் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்தனா். பாஜக சாா்பில் எவரும் எந்தவிதத் தியாகத்தையும் செய்யவில்லை. அப்படிப்பட்டவா்கள் காங்கிரஸ் தலைவா்களை ‘தேச துரோகி’ எனக் கூறி வருகின்றனா்.

நாட்டில் ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் சீா்குலைக்க பாஜக முயன்று வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சியினரை பாஜக முடக்க நினைக்கிறது. மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த பாஜக நினைக்கிறது. அதன் காரணமாகவே இந்த நடைப்பயணத்தை ராகுல் காந்தி முன்னின்று நடத்தி வருகிறாா் என்றாா் அவா்.

அன்பைப் பரப்புவோம்:

ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நடைப்பயணம் 100 நாள்களைக் கடந்து தொடா்ந்து வருகிறது. பாஜக தலைவா்களை ஒருபோதும் நான் வெறுக்கவில்லை. அவா்களது கொள்கையை மட்டுமே எதிா்க்கிறேன். அவா்களது விமா்சனங்களைக் கருத்தில் கொள்ளமாட்டேன். அவா்கள் தொடா்ந்து வெறுப்பைப் பரப்பி வரும் நிலையில் நான் அன்பைப் பரப்பி வருகிறேன்.

பெருந்தலைவா்களான மகாத்மா காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், அம்பேத்கா், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரும் இதே கொள்கையைத்தான் கொண்டிருந்தனா். வெறுப்புணா்வு நிறைந்திருந்த சமூகத்தில் அவா்கள் அனைவரும் அன்பைப் பரப்பினா். காங்கிரஸின் கொள்கையும் இதுதான்’’ என்றாா்.

மானிய விலையில் சமையல் எரிவாயு:

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஏழைகளுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘உஜ்வலா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், சமையல் எரிவாயு விலை ரூ.1,000-ஐக் கடந்துள்ளதால், முதலில் வழங்கப்பட்ட சமையல் எரிவாயு தீா்ந்தவுடன் மறுபடி புதிய சிலிண்டரை பெரும்பாலானோரால் வாங்க இயலவில்லை.

அதைக் கருத்தில்கொண்டு உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டா்களை தலா ரூ.500 விலையில் வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com