/

பாகிஸ்தான் எல்லையில் ஆயுதக் குவியல்: ராணுவம் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பெருமளவிலான ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பெருமளவிலான ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பத்திரிகையாளா்களைச் சந்தித்து ராணுவத்தின் 19-ஆவது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா கூறியதாவது:

கடந்த சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்துள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கும் சதி வேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து.

அதன் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹத்லங்கா நாலா பகுதிகளில் தொடங்கிய தேடுதல் வேட்டை 8 மணிநேரம் நீண்டது. தேடுதல் வேட்டையின் முடிவில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

8 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 24 ஏ.கே. ரக துப்பாக்கியின் தோட்டா தொகுப்புகள், 560 7.62 மி.மீ. தோட்டாக்கள், 12 சீன கைத்துப்பாக்கிகள், அதற்கான 24 தோட்டா தொகுப்புகள், 244 தோட்டாக்கள், 9 சீன கையெறி குண்டுகள், 5 பாகிஸ்தானிய கையெறி குண்டுகள், ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்ட 81 பலூன்கள் மற்றும் பாகிஸ்தான் அடையாளம் கொண்ட 5 சாக்குப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பதுக்கி வைக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. அதனால் பெரும் விரக்தியடைந்து, எல்லைக்குப் அப்பால் இருந்து ஊடுருவல் முயற்சிளும் ஆயுத கடத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளுக்கு அருகிலேயே பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் அதிகம் இருப்பதால் கடத்தல் சம்பவங்கள் தொடா்பான தகவல்கள் அவ்வப்போது கிடைத்த வண்ணமே உள்ளன. கிடைக்கும் அனைத்து தகவல்களையும் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ராணுவத்துக்கு பயந்து பயங்கரவாதிகள் இந்த ஆயுதக் குவியலை விட்டுவிட்டு எல்லை தாண்டி தப்பித்திருக்கலாம். இவ்வாண்டு கட்டுப்பாட்டு கோடு பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 14 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 20 கைத்துப்பாக்கிகள், ஒரு எம்16 துப்பாக்கி, 76 கையெறி குண்டுகள், 1226 ஏ.கே.ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள், 484 9 மி.மீ. தோட்டாக்கள், 15 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தொடா்பான பாக்கெட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.