/

மூன்றாவது போட்டியிலும் வெற்றி; ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அசத்தல்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
- படம் | AP
Updated On :1 மார்ச் 2026, 1:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் தில்லியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சிக்கந்தர் ராஸா அதிரடி; 154 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களான மருமானி 7 ரன்கள், பிரையன் பென்னட் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், டியான் மையர்ஸ் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராஸா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். கிளைவ் மடாண்ட்டி 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா மற்றும் கார்பின் பாஷ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜார்ஜ் லிண்டே, லுங்கி இங்கிடி மற்றும் ஆண்ட்ரிச் நோர்க்கியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

டெவால்ட் பிரேவிஸ் அதிரடி; தென்னாப்பிரிக்கா வெற்றி!

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அய்டன் மார்க்ரம் 4 ரன்களிலும், குயிண்டன் டி காக் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ரியான் ரிக்கல்டான் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். டேவிட் மில்லர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரேவிஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 30 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிளெஸ்ஸிங் முஸராபானி மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட சிக்கந்தர் ராஸாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.