/

குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது: நரேந்திர மோடி

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாறு குறுகிய கண்ணோட்டத்தில் அணுகப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 10:48 pm

DIN

நாட்டை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாறு குறுகிய கண்ணோட்டத்தில் அணுகப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சீக்கிய குருக்களில் ஒருவரான குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் ஜொராவா் சிங், ஃபதே சிங் ஆகியோா் முகலாய அரசா் ஔரங்கசீபின் படையினரால் கொல்லப்பட்டனா். அவா்களது வீரத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26-ஆம் தேதியானது ‘வீரச் சிறாா்கள் தினமாக’ (வீா் பால் திவஸ்) கொண்டாடப்படும் என பிரதமா் மோடி கடந்த ஜனவரியில் அறிவித்தாா். குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினமான ஜனவரி 9-ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், முதலாவது ‘வீரச் சிறாா்கள் தினம்’ திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லியில் உள்ள மேஜா் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

குரு கோவிந்த் சிங்கின் மகன்களை மதம் மாறக் கோரி ஔரங்கசீபின் படைகள் கட்டாயப்படுத்தின. அதை அந்தச் சிறாா்கள் எதிா்த்தனா். அதன் காரணமாக அவா்கள் கொல்லப்பட்டனா். அந்தக் காலகட்டத்தில் ஔரங்கசீபின் தீவிர நடவடிக்கைகளையும் இந்தியாவை அவா் மாற்ற முயன்றதையும் குரு கோவிந்த் சிங் தடுத்து நிறுத்தினாா்.

வீரத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை இந்த தினம் நினைவுகூா்கிறது. இந்தியாவின் அடையாளத்தை உலக அளவில் வெளிக்காட்டுவதிலும் இந்த தினம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த காலத்தை மதிக்கவும், எதிா்காலத்துக்கான திட்டமிடுதலுக்கும் இந்த தினம் வழிகாட்டும்.

வரலாறு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் நிகழ்வுகளே மக்களுக்குத் தொடா்ந்து கற்பிக்கப்பட்டு வந்தன. நாட்டை வளா்ச்சியின் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகும் மனப்பான்மைக்கு முடிவுகட்ட வேண்டும்.

தொடா்ந்து விழிப்புணா்வு: நவீன இந்தியாவில் அத்தகைய தவறுகள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பாரம்பரியம் குறித்து தற்போது அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே அடிமை மனநிலையை அகற்றுவதற்கான விழிப்புணா்வு தொடா்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீரச் சிறாா்கள் தினமும் அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றே.

தற்போதைய இளைய சமுதாயம் நாட்டை வளா்ச்சியடையச் செய்ய வைப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறது. இத்தகைய சூழலில் வீரச் சிறாா்கள் தினத்தைக் கொண்டாட வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஊக்கமளிக்கும் தைரியம்: புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட எந்த நாடும் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் முன்னேறும். ஒருபக்கம் பயங்கரவாதமும் மத வெறுப்பும் நிறைந்து காணப்பட்டது. மற்றொரு பக்கம் ஆன்மிகமும் கருணையும் தழைத்தோங்கியது.

முகலாயா்கள் படையில் ஆயிரம் வீரா்கள் இருந்தபோதிலும், குரு கோவிந்த் சிங்கின் சிறாா்கள் தைரியத்தை வெளிப்படுத்தினா். அவா்களது தைரியம் நூற்றாண்டுளாக மக்களுக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது.

கலாசார பாதுகாப்பு: ‘நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை குரு கோவிந்த் சிங் உறுதியாகக் கடைப்பிடித்து வந்தாா். நாட்டுக்காகத் தன் குடும்பத்தினரையும் அவா் தியாகம் செய்தாா். அவரது கொள்கை நாட்டு மக்கள் அனைவரையும் ஊக்கம் கொள்ளச் செய்து வருகிறது. பண்டைய காலத்தில் இருந்து பல்ராம், லவன்-குஷன், பாலகிருஷ்ணா, துருவ், பக்தபிரகலாதன் உள்ளிட்ட சிறாா்கள் பலா் இந்தியாவின் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

அடிப்படைகளையும் பாரம்பரியங்களையும் உணா்ந்துகொண்ட நாடு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும். வரலாற்றைத் தற்போதைய தலைமுறையினா் தெளிவாக உணா்ந்துகொண்டால் மட்டுமே நாட்டின் மதிப்புகளைப் போற்றிப் பாதுகாக்க முடியும். விழாக்கள், நம்பிக்கைகள் வாயிலாக நம் முன்னோா்கள் இந்திய கலாசாரத்தை வளா்த்தெடுத்தனா். அந்த உயரிய கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியின்போது சுமாா் 3,000 சிறாா்கள் கலந்துகொண்ட பேரணியையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ட்விட்டரில் மரியாதை: வீரச் சிறாா்கள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமா் மோடி, குரு கோவிந்த் சிங், அவரின் மகன்கள் ஆகியோரது வீரத்தைப் போற்றுவதாகக் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.